மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்த தாராவியில் 185-வது வார்டு பாஜக வேட்பாளர் ரவிராஜா தோல்வி அடைந்துள்ளார். 5 முறை காங்கிரஸ் கவுன்சிலராக, மும்பை மாநகராட்சித் தலைவராக இருந்த ரவிராஜா 2024-ல் பாஜகவுக்கு தாவியவர்.
மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 20 மாநகராட்சிகளை பாஜக தனித்து கைப்பற்றியுள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சிகள் 4 மாநகராட்சிகளில் வென்றுள்ளன.
மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பேச்சு பெரும் சர்ச்சையானது. மும்பை தேர்தலில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நட்சத்திர பேச்சாளராக அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
அப்போது, “மும்பை மகாராஷ்டிராவின் ஒரு பகுதி அல்ல.. சர்வதேச நகரம்” என பேசினார் அண்ணாமலை. இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே, அண்ணாமலையை ஒருமையில் இழிவாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளது. 29-ல் 24 மாநகராட்சிகளை பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றி உள்ளன.
அதேநேரத்தில் மும்பை தாராவியில் பாஜக வேட்பாளர் ரவி ராஜா தோல்வி அடைந்தார். ரவி ராஜாவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரசாரம் செய்திருந்த நிலையில் அவர் தோல்வி அடைந்தார்.
யார் இந்த ரவி ராஜா?
மும்பையில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் தாராவியின் பகுதிகள் சிலவற்றை உள்ளடக்கியது மும்பை மாநகராட்சியின் 185-வது வார்டு. இதில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட ரவி ராஜா, முன்னர் காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகளாக பணியாற்றியவர். F North Ward-ல் 5 முறை கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் ரவி ராஜா. மும்பை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர் ரவி ராஜா.
2024-ல் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது அவருக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு தரவில்லை. அதனால் பாஜகவுக்கு தாவினார். இத்தேர்தலில் 185-வது வார்டில் போட்டியிட்ட ரவி ராஜாவை ஆதரித்து அண்ணாமலை தீவிர பிரசாரம் செய்தார். இந்த படங்களை அண்ணாமலை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார். ஆனால் பாஜக வேட்பாளர் ரவி ராஜாவை உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.
அதே நேரத்தில் அண்ணாமலை பிரசாரம் செய்த சில வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.
