மழைக்காலத்தில் காய்கறிகளை வாங்கும்போது விலை, நிறம், தோற்றம் மட்டும் பார்த்தால் போதாது. அதிக ஈரப்பதம் காரணமாக சில காய்கறிகளில் பூச்சித் தாக்குதலும் அழுகலும் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் காயை வீட்டுக்கு கொண்டு வந்து நறுக்கும்போதுதான் உள்ளே புழு இருப்பது தெரியலாம். எனவே, காய்கறிகளைத் தேர்வு செய்வதில் சற்று கூடுதல் கவனம் தேவை.
கத்தரிக்காய், வெண்டைக்காயை இப்படிப் பாருங்க!
கத்தரிக்காயின் தோலில் சிறிய துளைகள், கருப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளிகள் இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கலாம். காயை அழுத்தும்போது குறிப்பிட்ட இடத்தில் மென்மையாகவோ, குழியாகவோ இருந்தாலும் கவனம் தேவை.
வெண்டைக்காயில் சிறிய துளைகள் இருக்கிறதா என்றும், காம்பு அதிகமாக கறுத்துள்ளதா என்றும் பார்க்க வேண்டும். உறுதியாகவும் பளபளப்பாகவும் இருக்கும் காய்களைத் தேர்வு செய்வது நல்லது.
பாகற்காய், காலிஃபிளவரிலும் சோதனை அவசியம்
பாகற்காயில் துளைகள், அசாதாரண கறைகள் இருந்தால் பூச்சித் தாக்குதல் இருக்கலாம். மிகவும் மென்மையாக அல்லது சுருங்கியிருக்கும் காய்களையும் தவிர்ப்பது நல்லது. வீட்டுக்கு வந்ததும் நீளவாக்கில் வெட்டி உள்ளேயும் பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
காலிஃபிளவரில் பூக்களுக்கு இடையில் புழுக்கள் மறைந்திருக்க வாய்ப்புள்ளது. கரும்புள்ளிகள், சிறிய துளைகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். வாங்கியதும் சிறு சிறு பூக்களாகப் பிரித்து உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் வைத்துக் கழுவலாம்.
அவரைக்காயை எப்படி தேர்வு செய்வது?
அவரைக்காயில் சிறிய துளைகள், கரும்புள்ளிகள் அல்லது பூச்சி கடித்த தடயங்கள் உள்ளதா என்று பார்க்க வேண்டும். மிகவும் முற்றிய, நார் அதிகமாக இருக்கும் காய்களைத் தவிர்த்து, பச்சையாகவும் உறுதியாகவும் இருக்கும் காய்களைத் தேர்வு செய்யலாம்.
வீட்டுக்கு வந்ததும் செய்ய வேண்டியது
காய்கறிகளை வாங்கியவுடன் ஒவ்வொன்றாகப் பரிசோதித்து, அழுகல் அல்லது நிறமாற்றம் உள்ளவற்றைத் தனியாகப் பிரிக்க வேண்டும். ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து காற்றோட்டமான இடத்தில் சேமிப்பது அவசியம்.
மழைக்காலத்தில் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி குவிப்பதைவிட, தேவைக்கேற்ப வாங்கி விரைவாகப் பயன்படுத்துவது நல்லது.
