பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை அனுமதிக்க முடியாது- டிரம்ப்பிடம் மோடி ‘கறார்’

Published On:

| By Minnambalam Desk

Modi Trumph

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு மத்தியஸ்தம் செய்வதை அனுமதிக்க முடியாது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Modi Firmly Tells Trump: No Mediation Allowed in Pakistan Issue

கனடாவில் ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் மோடியுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: டிரம்ப்பிடம் பேசிய மோடி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து விவரித்தார். பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை ஏற்றுதான் தாக்குதல் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது என்றும் அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களுக்காகவோ அமெரிக்காவின் அழுத்தங்களுக்காகவோ தாக்குதலை இந்தியா நிறுத்தவில்லை என்றும் டிரம்ப்பிடம் மோடி கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்பதுதான் நிலைப்பாடு எனவும் டிரம்ப்பிடம் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

இப்பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவுக்கு வருகை தருமாறு மோடிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார். ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட பயணங்களை சுட்டிக்காட்டி தம்மால் வர இயலாது என டிரம்ப்பிடம் மோடி விளக்கினார். இவ்வாறு விக்ரம் மிஸ்ரா தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, இந்தியா- பாகிஸ்தான் இடையே யுத்த நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக முதலில் அறிவித்தவர் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்து இரு நாடுகளிடையேயும் அமைதியை தாம் உருவாக்கியதாக டிரம்ப் இடைவிடாமல் பேசி வந்தார். இதனால் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்ற இந்தியாவின் கொள்கை மாறிவிட்டதா? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் முதல் முறையாக டொனால்ட் டிரம்ப்பிடம் பேசிய மோடி, எந்த ஒரு நாட்டின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share