மோடி வருகைக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள்… 20 காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வீட்டுக் காவல்… பெசன்ட் நகரில் இளம் பெண்கள் சரமாரி கேள்வி!

Published On:

| By Mathi

PM Modi-Chennai-Protest

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்கள் பதாகைகளை ஏந்தி பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

காங்கிரஸ் கறுப்பு கொடி போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11-ந் தேதி) சென்னை வருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டங்களை நடத்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.

ADVERTISEMENT

சென்னையில் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

சென்னை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி முகமது நவ்ஷத் அலியின் வீட்டில் இருந்து 30 கறுப்பு பலூன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் டில்லிபாபு உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் வருகையின்போது கறுப்புக் கொடி போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்கள் சிலர் பதாகைகளை ஏந்தி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஏந்திய பதாகைகளில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகிய 3 பேருக்கும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

மோடிக்கு எழுப்பிய கேள்விகள்

“பிரதமர் மோடி… தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வாக்குத் திருட்டு தொடர்பாக எப்போது பேசப் போகிறீர்கள்?”

“உங்கள் டெல்லி அரசால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு ஏன் வருகிறீர்கள்?”

முதலமைச்சர் விஜய்க்கு கேள்விகள்

“முதலமைச்சர் விஜய்… வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக மௌனம் காப்பது ஏன்?”

“தமிழ்நாட்டில் கேள்வி கேட்பது எப்போது குற்றமாக மாறியது?”

ராகுல் காந்திக்கும் கேள்வி

“ராகுல் காந்தி… நாங்கள் கைது செய்யப்படுகிறோம். SIR-க்கு எதிராகப் பேச மறுக்கும் முதலமைச்சர் விஜய்யுடன் நீங்கள் காபி குடிப்பது ஏன்?” இவ்வாறு பதாகைகளில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

பெசன்ட் நகர் கடற்கரையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பைப் பதிவு செய்த இளம் பெண்கள், போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றனர்.

கறுப்புக் கொடி காட்டிய காவலர்

இதனிடையே, ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையில் தலைமைக் காவலர் கோதண்டபாணி (42) என்பவர் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

தனது மகளுக்கு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது கால் அகற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டிய கோதண்டபாணி, நீதி கோரி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை தரப்பு மருத்துவ அலட்சியக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. கோதண்டபாணியைப் பிடித்து விசாரித்த போலீசார் பின்னர் விடுவித்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share