பயிர் காப்பீடு… விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே முக்கிய கோரிக்கை!

By Minnambalam

|

Published on 2 Jul 2024, 9:21 PM

2024 ஆம் ஆண்டு குறுவை பருவ பயிர்களை உடனடியாக காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 2) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

“முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் உழவர் பெருமக்களுக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025 ஆம் நிதி ஆண்டின் தனி நிதிநிலை அறிக்கையில் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீட்டில் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 37 மாவட்டங்களில் 2024-2025 ஆம் ஆண்டில் குறுவை, சம்பா, நவரை / கோடை ஆகிய மூன்று பருவங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை – உழவர் நலத்துறையால் அரசாணை ஜூன் 28 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும் வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைகோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு 2024 ஜீன் 21-ஆம் தேதி முதல் மத்திய அரசின் தேசிய பயிர்காப்பீட்டு வலைதளத்தில் மேற்கோள்ளப்பட்டு வருகிறது.

இதில் முக்கிய பயிரான குறுவை நெற்பயிரை 2024 ஜீலை 31 ஆம் தேதி வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் மகசூல் இழப்பு, விதைப்பு அல்லது நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு அல்லது நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு அருகிலுள்ள பொது சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணம் (Premium) செலுத்தி கடைசி தேதி வரை காத்திருக்காமல் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் அதாவது ஜூலை 31-க்குள் தங்களது பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், புயல், வெள்ளம் ஆகியவற்றால் பயிர் சேதம் அடைந்த பிறகு அப்பயிரை காப்பீடு செய்ய இயலாது எனவும், காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க வழிவகையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படுத்திவரும் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை: நடுரோட்டில் பற்றி எரிந்த பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள்!

உத்தரபிரதேசத்தில் கோர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் பலியான சோகம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel