உத்தரபிரேதச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தராவ் பகுதியில் நாராயண் சர்க்கார் மதத்தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்சங் பிரார்த்தனை கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பெரும்பாலும் அதிகளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தநிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட மாஜிஸ்திரேட்டு அதிஷ் குமார் கூறும்போது, “கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆன்மீக நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து பலரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. இது தனியார் நிகழ்ச்சி. இந்த விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
60 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், “உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த சோகமான சம்பவம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசினேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக” : ராகுல் உதயநிதி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்த மோடி
“ஜாமீனில் தான் வெளியே இருக்கிறீர்கள்” – நாடாளுமன்றத்தில் ராகுலை மிரட்டிய மோடி