“தெரு நாய்கள் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிடலாம். ஆனால், சட்டத்தில் அதற்கு இடமில்லை” என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். Minister Nehru stray dog
சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. நேற்றைய (மார்ச் 17) விவாதத்தின் போது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும்போது,
“தெரு நாய்களால் ஏற்படும் தொல்லையால் அழுகையே வந்துவிடுகிறது. வீட்டில் வளர்க்கும் ஆடுகளை இழக்க நேரிகிறது. தெரு நாய் கடியால் உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “இதற்கான தீர்வையும் நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும். தெரு நாய்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு தெரு நாயை பிடித்தால், அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பிடித்த இடத்திலேயே அதனை விட வேண்டும். அந்த நாய் இறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதனால் தெரு நாய்களை பிடிக்க அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திமுக எம்.பி-க்களை வலியுறுத்தியுளேன். தெரு நாய்கள் பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிடலாம். ஆனால், சட்டத்தில் அதற்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, “தெருநாய்களால் ஆடுகளை இழப்பது தொடர்பான பிரச்சனை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுடனும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தார். Minister Nehru stray dog