கீற்றுக்கொட்டகையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி: ஆணவக்கொலையா? – போலீசார் விசாரணை

Published On:

| By Pandeeswari Gurusamy

mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காதலித்து வந்த இளைஞரும் மாணவியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தரங்கம்பாடி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (19). இவரது தந்தை மாரிமுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியின் தந்தை லட்சுமிகாந்தன். மாணவியும் பார்த்திபனும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இரு வீடுகளும் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளன. மாணவி பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர தயாராக இருந்தார்.

ADVERTISEMENT

மாணவியின் குடும்பத்தினர் சாதி வேறுபாட்டால் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஜூன் 29 இரவு பார்த்திபன், மாணவியின் தந்தை லட்சுமிகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தாக்குதல் மற்றும் சாதி அவதூறு புகார் அளித்தார். பொறையாறு போலீசார் SC/ST (Prevention of Atrocities) Act உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் சிறுமி நள்ளிரவில் வீட்டில் இருந்து மாயமானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை தன் மகளைக் காணவில்லை என்று நேற்று காலை 6.30 மணியளவில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து பார்த்திபனின் செல்போன் சிக்னலை வைத்துப் போலீசார் தேடியபோது, அதிகாலை சாத்தங்குடியில் உள்ள பார்த்திபனின் உறவினருக்குச் சொந்தமான ஒரு வயலில் உள்ள கீற்றுக் கொட்டகையில் பார்த்திபன் மற்றும் மாணவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். உடல்களில் வெளிப்படையான காயங்கள் இல்லை எனப் போலீசார் தெரிவித்தனர். இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

மயிலாடுதுறை எஸ்.பி (பொறுப்பு) ஜி. ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். உயிரிழந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்க ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

சம்பவம் அறிந்ததும் பார்த்திபனின் உறவினர்கள் ஆத்திரமடைந்து மாணவியின் வீடு மற்றும் உறவினர் வீட்டைச் சேதப்படுத்தினர். இதில் உறவினர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்தை ஆணவக் கொலை என வழக்குப் பதிவு செய்யக் கோரினர்.

ADVERTISEMENT

முன்னதாக பார்த்திபன் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்த மாணவியின் தந்தை லட்சுமிகாந்தன், சூர்யா, மணிமாறன், வசந்தன், விஜயகுமார் உள்ளிட்ட ஐந்து பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் 4 பேரைக் கைது செய்த போலீசார் மயிலாடுதுறை குற்றவியல் நீதிபதி லோகநாதன் முன் ஆஜர்படுத்தினர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மாணவியின் தந்தை லட்சுமிகாந்தனின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்தில் பார்த்திபன் மற்றும் மாணவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா இல்லை ஆணவக் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share