இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (Maruti Suzuki) ஏப்ரல் மாதத்தில் 2,39,646 யூனிட்கள் என்ற சாதனை அளவிலான மொத்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33.29 சதவீதம் வளர்ச்சி ஆகும். இந்நிறுவனத்திற்கு புதிய நிதியாண்டு மிகவும் வலுவாகத் தொடங்கியுள்ளது. இதில் சிறிய ரக கார் பிரிவு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 1,79,791 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. உள்நாட்டு சந்தையிலும் இந்நிறுவனம் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டு விற்பனை 1,91,122 யூனிட்களாக இருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 1,42,053 யூனிட்களாக இருந்தது.
“இந்த ஆண்டின் தொடக்கம் எங்களுக்கு வலுவாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு சிறிய கார்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன” என்று நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) பார்த்தோ பானர்ஜி கூறினார். மேலும், நிறுவனத்தின் அதிகபட்ச உள்நாட்டு விற்பனை டிசம்பர் 2025-ல் 182,165 யூனிட்டுகளாக இருந்தது. அது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதத்தில் மினி கார் பிரிவில் வலுவான வளர்ச்சி காணப்பட்டதாகவும், இது அப்பிரிவின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் பானர்ஜி கூறினார். 153 சதவீத அதிகரிப்பு, சந்தையில் தேவை இருப்பதையும், நாங்கள் அதை விற்பனை செய்வதையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். இருப்பினும், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரினால் பெட்ரோல் விலை உயர்ந்தால் தேவை பாதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மினி கார் பிரிவில் (ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ) விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 6,332 யூனிட்டுகளாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 16,066 யூனிட்டுகளாக இருந்தது. காம்பாக்ட் கார் பிரிவில் (பலேனோ, செலரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர்) விற்பனை 2025 ஏப்ரல் மாதம் 61,912 யூனிட்டுகளாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 80,659 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் எஸ்யூவி பிரிவும் வலுவாக இருக்கிறது.
பயன்பாட்டு வாகனங்களின் (பிரெஸ்ஸா, எர்டிகா, இ-விட்டாரா, ஃபிரான்க்ஸ், கிராண்ட் விட்டாரா, இன்விக்டோ, ஜிம்னி, விக்டோரிஸ் மற்றும் எக்ஸ்எல்6) விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 59,022 யூனிட்டுகளாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 77,892 யூனிட்டுகளாக உள்ளது. இலகுரக வர்த்தக வாகனமான (எல்சிவி) சூப்பர் கேரியின் விற்பனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3,349 யூனிட்டுகளாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 3,418 யூனிட்டுகளாக உள்ளது.
மாருதி நிறுவனத்தின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 27,911 யூனிட்டுகளாக இருந்த ஏற்றுமதி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 40,054 யூனிட்டுகளாக உள்ளது.
