மலையாளத் திரையுலகில் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் மம்முட்டி. Mammootty Mounam Sammadham movie crossed
இருபதாவது வயதில் ‘அனுபவங்கள் பாலிசகல்’ எனும் படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தோன்றியவர், பின்னர் ‘காலச்சக்கரம்’ படத்தில் நடித்தார்.
ஆனாலும், 1980இல் வெளியான ‘விழ்க்கனுண்டு ஸ்வப்னங்கள்’ எனும் படத்திலேயே அவருக்குப் பெயர் இடுகிற விதமான பாத்திரம் கிடைத்தது. இடையே, அவர் முதன்மை பாத்திரம் ஏற்ற சில படங்கள் பாதியிலேயே நின்று போயிருந்தன. பிறகு ‘மேளா’, ‘ஸ்போதனம்’, ‘முன்னேட்டம்’, ‘த்ரிஷ்ணா’ உள்ளிட்ட படங்களில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்தார்.

பிறகு ‘யவனிகா’, ’படயோட்டம்’, ‘ஈ நாடு’ படங்கள் வழியாக ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். எண்பதுகளின் பிற்பாதியில் கமர்ஷியல் படங்கள், கலைப் படங்கள், பரீட்சார்த்த முயற்சிகள் என்று வெவ்வேறுவிதமான படைப்புகளில் இடம்பிடித்தார். பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கிற கதைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
1988இல் வெளியான ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ திரைப்படம் மம்முட்டிக்கு நாடு முழுவதும் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. எஸ்.என்.சுவாமி எழுத்தாக்கத்தில், கே.மது இயக்கிய இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 365 நாட்களைக் கடந்தது.
அந்த வெற்றியே, தமிழ் ரசிகர்களுக்கு மம்முட்டியை அறிமுகப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, கிட்டத்தட்ட அதே கதையின் சாயலைக் கொண்ட ‘மௌனம் சம்மதம்’ படத்தில் நடித்தார் மம்முட்டி. அதே சுவாமி – மது கூட்டணியில் உருவான இப்படத்தை கோவை செழியன் தயாரித்தார்.

இதில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் வாதாடுகிற வழக்கறிஞராக மம்முட்டி தோன்றியிருந்தார். அவரது ஜோடியாக அமலா நடித்தார்.
நாயகன் நாயகியைத் தாண்டி, இப்படத்தில் நடித்த ஜெய்சங்கர், நாகேஷ், சரத்குமார், சத்யப்ரியா, சுகுமாரி, ஜெய்கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, கொச்சின் ஹனீபா பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தது திரைக்கதை.
’இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ மற்றும் ‘கோர்ட் ரூம் ட்ராமா’ வகைமையில் அமைந்த இப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற் போலச் சண்டைக்காட்சிகளும் சேர்க்கப்பட்டன.
’ஒரு ராஜா வந்தானாம்’, ‘சிக் சிக் ஜா’, ‘ஐந்து பைசா பத்து பைசா’ பாடல்களைத் தாண்டி, இதில் இடம்பெற்ற ‘கல்யாண தேன் நிலா’ பாடல் காலத்தால் அழியாததாக மாறியது. இன்றும் ‘மௌனம் சம்மதம்’ படத்தை நினைவுகூரச் செய்வது அப்பாடலில் ஒலிக்கும் கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் தான். அதனை நினைவில் இருத்தும்விதமாக, அப்பாடலில் விபின் தாஸ் ஒளிப்பதிவும் அமைந்திருந்தது.

அனைத்தையும் தாண்டி, பின்னணி இசையால் இப்படத்திற்கு உயிரூட்டியிருந்தார் இளையராஜா. அந்த காலகட்டத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் இருந்து வேறுபட்ட கதை சொல்லலைக் கொண்டிருந்தது ‘மௌனம் சம்மதம்’. அதனால் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
அதன் தொடர்ச்சியாக அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, மக்களாட்சி, ஆனந்தம் போன்ற படங்களில் மம்முட்டியை நாயகனாக நடிக்கச் செய்தது. அவை அனைத்துமே அவரது இருப்பை அழுத்தமாகக் காட்டுகிற படங்களாக அமைந்தன.
எண்பதுகளில் மலையாளத் திரையுலகில் நாயகனாகக் கோலோச்சிய மம்முட்டி, தொண்ணூறுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார்.
இன்று அவரது பாணியை அப்படியே பின்பற்றி வெற்றி நடை போடுகிறார் மகன் துல்கர் சல்மான். இப்போதும் வித்தியாசமான நாயக பாத்திரங்களை ஏற்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் மம்முட்டி.
அப்படிப்பட்ட மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ‘மௌனம் சம்மதம்’ வெளியாகி இன்றோடு 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
