மலப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று (ஆகஸ்ட் 3) காலை மீண்டும் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழை தொடர்பான பாதிப்புகளில் இதுவரை 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 7 பேரைக் காணவில்லை என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பாணக்காடு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தற்போதைய பாதிப்புகள் குறித்து இன்று தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பெரும்பாலானோர் திரண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இன்று காலை திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனைப் பார்த்து அப்பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு அங்கிருந்து ஓடியதால் நூலிழையில் உயிர் தப்பினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே மலப்புரம், வயநாடு பகுதிகளுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் பாலக்காடு மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. தற்போது அப்பகுதியில் வணிக வளாகம் கட்ட மலையின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்ட மனிதத் தவறுகளாலேயே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
