திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாகம் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து அப்போதைய திமுக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவை உறுதி செய்தது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தபோது,அறநிலையத் துறை சார்பில் “தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை. தற்போது உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதிய நடைமுறையைப் புகுத்த பார்க்கிறார்கள் “என்று வாதிடப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி, “ஜனவரி மாதம் வந்த உத்தரவுக்கு எதிராக ஜூன் மாதத்தில் மேல்முறையீடு செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு சார்பில் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டி இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கை முழுமையாக விசாரித்தால்தான் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள், தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை அல்லது இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர் மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அதிகாரி, மதுரை காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
