இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ‘வர்த்தக வரவுத் தொகை தள்ளுபடி அமைப்பு’ (TReDS) விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது. நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) அதிக பணப்புழக்கத்தை வழங்குவதும், அவை கடன் பெறுவதை எளிதாக்குவதும் இதன் நோக்கமாகும். புதிய விதிகளின்படி, TReDS தளத்தில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு நிதியளிப்பவர்கள் இனி கடன் உத்தரவாதக் கவசத்தைப் (credit guarantee cover) பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று RBI தெரிவித்துள்ளது. இது கடன் வழங்குநர்களின் அபாயத்தைக் குறைப்பதோடு, MSME துறைக்கு அதிக நிதியை வழங்க அவர்களை ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
TReDS தளம் என்றால் என்ன?
TReDS என்பது ஒரு மின்னணு தளமாகும். இதில் MSME நிறுவனங்கள் தங்கள் நிலுவையில் உள்ள இன்வாய்ஸ்களை வங்கிகள் மற்றும் பிற நிதியளிப்பவர்களிடம் தள்ளுபடி விலையில் விற்று, உடனடி செயல்பாட்டு மூலதனத்தைப் பெறலாம். இது சிறு வணிகங்களின் பணப்புழக்கச் சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.
RBI-யின் புதிய மாற்றம் என்ன?
ரிசர்வ் வங்கியின் புதியவழிகாட்டுதல்களின்படி, நிதியளிப்பவர்கள் இப்போது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ‘கடன் உத்தரவாத அறக்கட்டளையிடமிருந்து’ (Credit Guarantee Trust) உத்தரவாதக் கவசத்தைப் பெறலாம். இத்தகைய உத்தரவாத அறக்கட்டளைகள் TReDS தளத்தில் பங்கேற்பாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. MSME நிறுவனங்களை இத்தளத்தில் இணைக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. TReDS இயக்குபவர்களுக்கான மூலதன விதிமுறைகள், பிற கட்டணச் சேவை அமைப்பு இயக்குபவர்களின் விதிமுறைகளுக்கு இணையாக மாற்றப்பட்டுள்ளன.
2028ஆம் ஆண்டு வரை அவகாசம்:
TReDS இயக்குபவர்களுக்கான குறைந்தபட்ச நிகர மதிப்பு (net-worth) வரம்பை ரிசர்வ் வங்கி ரூ.25 கோடியாக நிர்ணயித்துள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள தளங்கள் புதிய விதிகளுக்கு இணங்க 2028 மார்ச் 31 வரை கால அவகாசம் அளித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, நிதியளிப்பவர்கள் இப்போது TReDS பரிவர்த்தனைகளுக்குக் காப்பீட்டு வசதியையும் பெறலாம். இருப்பினும், இதற்கான செலவை MSME நிறுவனங்கள் மீது சுமத்த முடியாது. அதேவேளையில், ஒழுங்குமுறைச் சலுகைகளைப் பெறுவதற்கான ‘கடன் அபாயத் தணிப்பு’ (credit risk mitigation) நடவடிக்கையாக இது கருதப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
