மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாஸ் விவகாரத்தில் நான் தலையிடவில்லை. என் சார்பாகவோ, என் குடும்பத்தினர் சார்பாகவோ யாரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விவகாரத்தில் நிர்மல்குமார் மற்றும் ரமேஷின் தலையீடு அதிகமாக இருந்தது; 9,000 பாஸ்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை’ என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு, “இதுவரைக்கும் கோயிலுக்குள் சென்று நான் தரிசனம் கூட செய்யவில்லை. எல்லோரின் முதன்மையான நோக்கம், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாகவும் நல்லபடியாகவும் நடக்க வேண்டும் என்பதும், பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கக் கூடாது என்பதும்தான். பாஸ் விவகாரத்தில் நான் தலையிடவில்லை. என் சார்பாகவோ, என் குடும்பத்தினர் சார்பாகவோ யாரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை; இதை நான் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.
நான் யாருக்கும் ஒரு பாஸ் கூட வாங்கிக் கொடுக்கவில்லை. 9,000 பாஸ்களும் இந்து சமய அறநிலையத் துறை போர்டு மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் யாருக்குக் கொடுத்தார்கள் என்பதில் கூட நாங்கள் தலையிட்டுக் கேட்கவில்லை. முதல் நாள் மாலையில்தான் அந்தப் பாஸின் நிறத்தைக் கூட நான் பார்த்தேன். எந்தப் பாஸும் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. பொதுமக்களுக்கு அவர்கள் இணையதளம் மூலமாகவே பாஸ் கொடுத்திருந்தார்கள்; அதன் மூலமாகத்தான் அனைவரும் வந்திருந்தார்கள்.
எல்லோரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியை அமைதியாக, எந்தவித இடையூறுகளும் இல்லாமல், மக்களுக்குத் தொந்தரவு இல்லாமல் முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். அதன்படி விழா நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. எப்போதும் போல திமுகவைச் சேர்ந்த ஒரு சிலர் வெளியிலிருந்து சில பிரச்சினைகளைக் கிளப்புகிறார்கள். ஆனால் விழா மிகவும் சிறப்பாக நடந்தது’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும், அந்தச் சார்ந்த அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும்தான் முன்னிலையில் இருப்பார்கள். ஆனால், நான்தான் அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்; இருப்பினும் நான் கும்பாபிஷேகம் நடக்கும் பகுதியில் கூட இல்லை. நான் கூட்ட நெரிசலைச் சரிசெய்யும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தேன்.
எங்களுக்கு முதல்வர் கொடுத்த பணி, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதுதான். கோயில் கும்பாபிஷேக விஷயத்தைக் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்தான் பார்த்துக்கொண்டார்கள். மற்றபடி ஆட்சியர், ஆணையர் ஆகியோரின் உதவிகளுடன் நாங்கள் கண்காணிப்பு மட்டுமே செய்தோம்.
மிகவும் தெளிவாகத் திட்டமிட்டு, எந்தவித இடையூறும் இல்லாமல் நல்லபடியாக மக்களுக்குத் தரிசனம் வழங்கி முடிக்கப்பட்டது. அந்தந்த நேரத்தில் தேவையான முடிவுகளை எடுத்தோம். முதலில் கோயில் நிர்வாகம் தரப்பில் காலை 10 மணிக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், 8.45 மணிக்கே பொதுமக்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க ஆரம்பித்தோம். அந்தந்த நேரத்தில் எந்தெந்த முடிவுகளை எடுக்க வேண்டுமோ, அதற்கான வேலைகளில் இருந்தோம். நல்லபடியாகக் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த காரணத்தினால், திமுகவால் அதைப்பொறுத்துக்கொள்ள முடியாமல் இது போன்ற வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எந்தத் தலையீடும் கிடையாது’ என்று தெரிவித்தார்.
‘ஆதீனங்கள் நிற்கும்போது மார்ட்டின் குடும்பத்தினர் உட்கார்ந்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘அந்தப் பூஜை மேலே நடந்ததாகத் தெரியவில்லை. கீழே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை; நான் விசாரித்துச் சொல்கிறேன்’ என்றார்.
