உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை- உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Mathi

Madras HC Orders Release of Udhayanidhi: What Happened in Court?

திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை காவல் நிலைய ஜாமீனில் இன்றே விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளதாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் என்.ஆர். இளங்கோ இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சனைக்காக தஞ்சாவூரில் நேற்று திமுக கண்டனப் போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தில் உதயநிதி குறிப்பிட்டதாக கூறி, சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து அவருடைய பேச்சுக்கும் அந்த வார்த்தைகளுக்கும் உள் அர்த்தத்தை கற்பித்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒரு நபர் புகார் கொடுத்தார்.

ADVERTISEMENT

இதனடிப்படையில் பெண்களை அவமரியாதை செய்ததாகவும் மற்றும் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் நேற்று இரவே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இன்று காலை சுமார் 8:30 மணி அளவில் தஞ்சாவூர் போலீசார் உதயநிதியை கைது செய்ய சென்னையில் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர்.

இதனால் இன்று காலை 10:30 மணி அளவில் உயர்நீதிமன்றத்தில் இந்த கைது நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது, அந்த முதல் தகவல் அறிக்கையே சட்டத்திற்கு விரோதமானது; அவசர வழக்காக எடுத்துக்கொள்ளச் சொல்லி வேண்டினோம்.

ADVERTISEMENT

இதை கருத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி இளந்திரையன், மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொல்லியிருந்தார்.

இதனையடுத்து, உதயநிதி வீட்டில் இருந்த தஞ்சாவூர் போலீசாரிடம் ”உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது; அதுவரை கைது செய்ய வேண்டாம்” என்று சட்ட நெறிகளையும், மாண்புகளையும் எடுத்துச் சொன்னோம்.

ADVERTISEMENT

அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாத தஞ்சாவூர் போலீசார் உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பிற்பகல் 1 மணி அளவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அரசு தரப்பில், “உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார் அதனால் முன்ஜாமீன் கிடைக்கத்தக்கது அல்ல” என்று வாதாடினர்.

இதற்கு பதிலாக, சென்னை உயர்நீதிமன்றம் எப்படியெல்லாம் மனித உரிமைகளை காக்கக்கூடிய நீதிமன்றம் என்பதை எடுத்துச் சொல்லி சில நிகழ்வுகளில் காவல்துறையினுடைய அத்துமீறல் அப்பட்டமாக தெரியும்போது, வெளிப்படையாக தெரியும்போது கைது செய்திருந்தாலும் கூட மாஜிஸ்திரேட்டிடம் கொண்டு சென்று ரிமாண்ட் செய்யக்கூடாது என்று பல இடைக்கால உத்தரவுகளை இந்த சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என எடுத்துக் காட்டி வாதங்களை முன்வைத்தோம்.

அப்போது நீதிபதி இளந்திரையன், ”சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளை கொடுத்திருக்கிறது. இதனுடைய விரிவான விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு கேட்கிறேன்” என்று சொன்னார்.

பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அட்வகேட் ஜெனரல், “உதயநிதி ஸ்டாலினை நீதிமன்றம் கொண்டு சென்று ரிமாண்ட் செய்யக்கூடிய எண்ணம் காவல்துறைக்கு ஏதுமில்லை. நாங்கள் காவல் நிலையத்திலேயே விசாரித்துவிட்டு அவருடைய வாக்கு மூலத்தை பதிவு செய்த பிறகு, அவருடைய சொந்த ஜாமீனில் விடுவிக்கப் போகிறோம். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப் போகிறோம்” என்று தெரிவித்தார்.

இதனைக் நீதிபதி இளந்திரையன் குறித்துக் கொண்டார். அப்போது, “ நாளைக்கு முக்கியமான சட்டமன்றக் கூட்டத்தொடர் இருப்பதால் இன்றே அந்த விசாரணையை முடித்து இன்றே உதயநிதி ஸ்டாலினை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று கேட்டோம். அதையும் நீதிபதி இளந்திரையன் உத்தரவாக கொடுத்துள்ளார்.

இம்ரான் பிரஜாபதி என்ற வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் பிரிவு 196 இல் வழக்கு பதிவுவதற்கு முன்பாக ஒரு காவல்துறை ஆய்வாளர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு நீண்ட ஒரு வரையறையை கொடுத்திருக்கிறது.

அந்த வரையறையை தெரியாமல், தெரிந்தும் புரியாமல், புரிந்தும் அதை உள்நோக்கத்தோடு காவல்துறை பின்பற்றாமல் இந்த வழக்கை பதிவு செய்து உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது கைது செய்து நாளை அவர் சட்டமன்றத்திற்குள் வரக்கூடாது என்று திட்டமிட்டனர். வழக்கம் போல் நீதிமன்ற உத்தரவால் மற்றொரு முறை சர்வாதிகாரம் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு என்.ஆர். இளங்கோ கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share