இனிவரும் காலங்களில் தமிழக உரிமை , ஜனநாயகம், மதச்சார்பின்மைபோன்ற விஷயங்ககளுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும் என மு. வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதியில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. முன்னதாக காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்தது. இதைத்தொடர்ந்து விஜய் 2 முறை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தற்போது வரை ஆளுநர் விஐயை ஆட்சி அமைக்க அழைக்க வில்லை. இந்நிலையில் தவெக தரப்பில் ஆதரவு கோரப்பட்ட நிலையில் இன்று சிபிஐ, சிபிஎம், விசிக, ஆகிய கட்சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
பரபரப்பான அரசியல் சூழலில் விஜய்க்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்,சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், அனைத்து கட்சிகளும் கண்டன அறிக்கை கொடுத்த நிலையில், விஜய் எதுவும் பேசாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மு. வீரபாண்டியன், “விஜய் பேச வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழக உரிமைகளுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும். ஜனநாயகத்திற்கான உரத்த குரல் எழுப்ப வேண்டும். மதச்சார்பின்மைக்கான உரத்த குரல் எழுப்ப வேண்டும். அவருக்கு இடதுசாரிகளும் இதர ஜனநாயக சக்திகளும் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, “தொகுதி உடன்பாடு என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. மத்திய அரசின் வகுப்புவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காகவும், மாநில உரிமைகளுக்காக குரல் எழுப்புவதற்காகவும் LDF உடன் நாங்கள் பத்தாண்டுகள் தொடர்ந்து பயணித்தோம். அந்த வகையில் ஜனநாயகத்தின் இந்திய கூட்டிசைவை காப்பதற்காகத்தான் பத்தாண்டுகள் தமிழக முதல்வரோடு இருந்தோம். இப்போதும் நாங்கள் அதைத் தொடர்வோம். வேறொரு ஜனநாயக கட்சியோடும் நாங்கள் தொடர்வோம். அது நாடு காக்கும் போராட்டம்.
இப்போது எழுந்திருக்கும் பிரச்சனை ஆட்சி அமைப்பது பற்றியது. மக்கள் இருக்கும் அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையை சகோதரர் விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பு தடைப்பட்டு விடக்கூடாது, அதுவும் இடதுசாரிகளால் தடைபட்டு விடக்கூடாது என்பது ஜனநாயக சிந்தனை. அதை நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்” என்றார்.
விஜய் பிற்காலத்தில் பாஜகவின் கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டால், தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “உரத்த குரல் எழுப்புவோம், அவரை நிர்பந்திப்போம். மீறினால் நாங்கள் போராடுவோம்” என்று தெரிவித்தார்.
