இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கைதி’. இந்தத் திரைப்படம் தான் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் முதல் திரைப்படமாகும். இந்தப் படம் வெளியாகி இன்றுடன்(அக்.25) 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்தப் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது x தளப் பக்கத்தில் பதிவிட்டு, ‘ எல்லாம் இங்கிருந்தே தொடங்கியது. கார்த்தி சார், எஸ்.ஆர்.பிரபு சார், மற்றும் யுனிவர்ஸுக்கு நன்றி. டில்லி விரைவில் மீண்டும் வருவான்’ எனப் பதிவிட்டுள்ளார்.
‘கைதி’ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பொன் பார்த்திபனும் எழுதினார். இந்தப் படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், ஜியார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், தீனா, பேபி மோனிகா, அம்ஜத், கண்ணா ரவி, அருண் அலெக்ஸாண்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்தனர். பாடல்களே இல்லாத இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை அமைத்திருந்தார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டார்.
எல்.சி.யூ – வின் அடித்தளமான ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீட் முதல் பாகத்தின் கிளைமாக்ஸிலேயே வைக்கப்பட்டது. யார் இந்த டில்லி..?, இவருக்கும் இந்த போதை கடத்தல் கும்பலுக்கும் என்ன சம்மந்தம்..? ஆகியவற்றை சொல்லும் கதை தான் ‘கைதி – 2’. மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக இருக்கும் இந்தப் படத்திற்கான வேலைகள் இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.