சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் (Kidney Patients) தவிர்க்க வேண்டிய அல்லது குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.
இதயம், கல்லீரல், சிறுநீரகம், மூளை ஆகியவை உடலின் முக்கிய உறுப்புகளாக உள்ளன. ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியில் சிறுநீரகங்கள் ஈடுபடுகின்றன். ரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள், நச்சுகள் மற்றும் அதிகப்படியான திரவத்தை வடிகட்டி சிறுநீரை உருவாக்குவதே சிறுநீரகங்களின் முதன்மைப் பணியாக உள்ளன. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, அவை உடலில் உள்ள பொட்டாசியத்தை எளிதாக அகற்றிவிடுகிறது. ஆனால் நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic kidney disease), சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீண்டகால மருந்துப் பயன்பாடு போன்றவற்றால் சிறுநீரகங்கள் பலவீனமடைந்தால் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியத்தை அகற்றுவது கடினமாகிவிடுகிறது.
பொட்டாசியம் உடலில் அதிகரித்தால் என்ன நடக்கும்?
உடலில் பொட்டாசியத்தின் அளவைப் போதுமான அளவில் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஆனாலும், சிறுநீரக பாதிப்பு ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரிக்கச் செய்யலாம். இந்த நிலை ஹைபர்கேலீமியா (Hyperkalemia) என்று அழைக்கப்படுகிறது. இதனால் சோர்வு, கைகால்களில் உணர்வின்மை, சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் இதயப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆகவே, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளை குறைவான அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை
பழங்கள் உடல் நலத்திற்கு நல்லது என்று கருதப்பட்டாலும் சில பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் ஆரஞ்சு சாறு, மாம்பழம், மாதுளை, பேரீச்சை, உலர் திராட்சை, முலாம்பழம் மற்றும் அவகேடோ போன்ற பழங்களை உட்கொள்வதை குறைத்துவிட வேண்டும். குறிப்பாக, உலர்ந்த பழங்களில் அதிக அளவு பொட்டாசியம் (Potassium) சேரும் தன்மை உள்ளது.
சில காய்கறிகள் பிரச்சனையை அதிகரிக்கலாம்
சில காய்கறிகள் சிறுநீரகப் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, தக்காளி, கீரை, பூசணி, பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளைக் குறைந்த (kidney patients avoid foods) அளவிலேயே சாப்பிட வேண்டும். உருளைக்கிழங்கு சாப்பிட விரும்பினால், அதிலுள்ள பொட்டாசியத்தின் அளவைக் குறைக்க அவற்றை நறுக்கி, தண்ணீரில் ஊறவைத்து, பயன்படுத்துவதற்கு முன்பு இரண்டு முறை வேகவைக்க வேண்டும்.
இறைச்சிகளில் எவற்றை தவிர்க்க வேண்டும்
பால், தயிர், சீஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களிலும் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைப்படி இந்தப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி ஈரல், அவரைக்காய், கொண்டைக் கடலை, பருப்பு வகைகள், உளுந்து, வேர்க்கடலை, பாதாம் மற்றும் விதைகள் ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகமாக இருக்கலாம். ஆகவே, அவற்றை சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது அவசியம். ஆகவே, மருத்துவரின் பரிந்துரைப்படி பொட்டாசியம் குறைந்த உணவுகளை உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு (Kidney damage) அதிகமாவதை தடுக்க முடியும்.
