திருச்சூர் மாவட்டம் முண்டத்திக்கோடு பகுதியில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் நேற்று மாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக நேற்று மாலை 3.30 மணியளவில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் சிக்கிய 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தலைவர்கள் இரங்கல் மற்றும் நிவாரணம்:
இந்த துயரச் சம்பவத்திற்குத் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இத்தொடர்ந்து முதல்வர் அலுவலகம் வெயிட்டுள்ள செய்தி குறிப்பில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவியாக தலா ரூ.14 லட்சம் வழங்கப்படும். இதில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 4 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 லட்சமும் வழங்கப்படும்.
காயமடைந்தவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியோடு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான செலவை ஆறு மாதங்களுக்கு அரசே ஏற்கும்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
