பரவும் ‘ஷிகெல்லா’ தொற்று: கேரளாவில் 135 பேருக்கு பாதிப்பு- 4 பேர் பலி! தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

Published On:

| By Mathi

Kerala battles Shigella surge: 4 deaths reported

கேரளாவில் ”ஷிகெல்லா” (Shigella) தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. கேரளா மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஷிகெல்லா தொற்று பாதிப்பு இருப்பதால் தமிழக எல்லைகளில் தீவிர மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஷிகெல்லா (Shigella) என்பது என்ன?

ஷிகெல்லா தொற்று என்பது ”ஷிகெல்லா”பாக்டீரியாவால் ஏற்படும் குடல் தொற்று நோயாகும். ‘ஷிகெல்லோசிஸ்’ (Shigellosis) என்றும் மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

ADVERTISEMENT

ஷிகெல்லா எப்படி பரவுகிறது? பாதிப்பு அறிகுறிகள் என்ன?

  • சுகாதரமற்ற உணவு, குடிநீர் மூலம் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது
  • இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்ட முதல் 2 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளிப்படும்.
  • வயிற்றுப் போக்கு ஏற்படும்; மலத்தில் இரத்தம், சளி அல்லது சீழ் கலந்து வெளியேறும்.
  • கடுமையான அடிவயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வலி ஏற்படும்
  • கடுமையான காய்ச்சல், குமட்டல், வாந்தி, களைப்பு மற்றும் மலம் கழித்த பிறகும் குடல் முழுமையாகக் காலியாகாத உணர்வு ஏற்படும்.
  • அனைத்து வயதினருக்கும் இந்த பாதிப்பு ஏற்படக் கூடும்; அதே நேரத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்

ஷிகெல்லா (Shigella) பாதிப்பு- என்ன செய்ய வேண்டும்?

  • வயிற்றுப்போக்கினால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பதால், நிறைய திரவங்கள், எலக்ட்ரோலைட் கரைசல்கள் (ORS) குடிப்பது அவசியம். கடுமையான நீரிழப்பு இருந்தால் நரம்பு வழி திரவ சிகிச்சை தேவைப்படலாம். அறிகுறிகள் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்; சரியாக வேக வைக்காத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்; சுகாதார முறைகளைப் பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டு கழுவுதல் அவசியம்
  • சுத்தமான சுகாதார முறைகளைப் பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி கைகளைச் சோப்பு போட்டு கழுவுதல் அவசியம்.

கேரளாவில் பாதிப்பு எங்கு அதிகம்?

  • கேரளாவின் வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவியுள்ளது. இப்பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • கேரளாவில் மொத்தம் 135 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இதில் அதிகபட்சமாக 68 பேர் கோழிக்கோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 பேர் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
  • கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 4 குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
  • கோழிக்கோடு மாவட்டத்தைத் தொடர்ந்து மலப்புரத்திலும் அதிக பாதிப்பு உள்ளது; வயநாட்டில் 16 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக எல்லைகளில்..

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் தீவிர மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

இப்பாதிப்பு தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) ஆராய்ச்சிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், “பொதுவாக வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வயிற்றுப்போக்கு பாதிப்புகள் வைரஸ் தொற்றால் ஏற்படுபவை, இவை தாமாகவே குணமாகிவிடும். ஆனால், ஷிகெல்லா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவகை வயிற்றுப்போக்கு ஆகும். இது ‘சீதபேதி’ (dysentery) நிலைக்குச் செல்லக்கூடியது; அதாவது, இது பெருங்குடலில் கடுமையான வீக்கம் அல்லது புண்களை ஏற்படுத்தி, இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கும். 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளே இந்தத் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் குடிநீர் ஆதாரங்களான கிணறு உள்ளிட்டவைகளில் கழிவுநீர் கலப்பதன் மூலம் இத்தொற்று ஏற்படுகிறது.

ADVERTISEMENT

ஷிகெல்லா பாதிப்பு என்பது உண்மையில் மிகவும் பொதுவானதுதான், ஆனால் அது அடிக்கடி பரிசோதிக்கப்படுவதில்லை. குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு லேசான வயிற்றுப்போக்கு ஏற்படும் போது, மருத்துவர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க இத்தகைய கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை” என்கிறார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share