ADVERTISEMENT

காமராஜர்: அடித்தள முன்னேற்றத்தின் நாயகன்

Published On:

| By Minnambalam Desk

Kamarajar Birth Day July 15

நா.மணி

(ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள். கல்வி வளர்ச்சி நாள் சிறப்புக் கட்டுரை)

ADVERTISEMENT

நானும் கண்டேன் காமராஜரை

நாங்கள் படித்த பள்ளி ஓர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி.‌ எங்கள் பள்ளித் தாளாளர் ஓர் சுதந்திரப் போராட்ட வீரர். சாந்திநிகேதன் என்று அதற்கு பெயரிட்டு மகிழ்ந்தார். காங்கயம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். குண்டடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தார். கே.எஸ். நடராஜ கவுண்டர் என்பது அவர் பெயர். அவர் நன்கு வயது முதிர்ந்து தான் இறந்தார். அவர் இறந்த அன்று அந்தப் பகுதி பட்டியல் சமூக மக்கள் அவரது வீட்டிற்குள் சென்று மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு அழுத அழுகை, வடித்த கண்ணீர் அவர் பெயருக்கு பின்னால் இருந்த சாதி அடையாளத்திற்குப் பதில் கூறியது.

ADVERTISEMENT

பதவிகள் போனது போலவே அவரது சொத்துக்களும் போய்விட்டது. எப்போதேனும் பள்ளிக்கு வருவார். நீண்ட நேரம் இருப்பார். ஒரு நாள் பள்ளி முழுவதும் பரபரப்பு. காமராஜர் வருகிறார் என்றார்கள். அப்போது அவர் முன்னாள் முதல்வர் தானே . அவர் வந்த அம்பாசிடர் காரில் எத்தனை பேர் உடன் வந்தார்கள் என்று தெரியவில்லை.‌ ஆனால் ஓரிருவர் தான் வந்திருக்க வேண்டும். எங்கள் பள்ளித் தாளாளர் பள்ளியின் கொடிமரம் அருகில் நிற்க வைத்து கதர் மாலை அணிவித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறிக் கொள்வார்கள். எல்லாம் இழந்த எங்கள் பள்ளித் தாளாளர். இழப்பதற்கு எதுவும் இல்லாத காமராஜர். என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. நான் என்ன படித்துக் கொண்டு இருந்தேன் என்று நினைவில் இல்லை. மிகச் சிறிய வயது எனக்கு. காரை விட்டு இறங்கி கதர் மாலையோடு அவர் நின்ற காட்சி மாத்திரம் அப்படியே நினைவில் நிற்கிறது. அப்போது இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து காமராஜர் கல்வி வளர்ச்சி நாளுக்கு கட்டுரை எழுதுவோம் என்று தெரியாது.


மூன்றில் ஒரு பங்கு கல்விக்கு:

ADVERTISEMENT

காமராஜர் ஆண்ட காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த வருமானமே 100 கோடி தான். அதில் 30 கோடியை எடுத்து கல்விக்காக செலவு செய்தார் காமராஜர். தனது ஆட்சிக் காலத்தில் மட்டும் 25000 பள்ளிகளுக்கு மேற்பட்ட பள்ளிகளை திறந்தார் . அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் மாத்திரம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை காமராஜர் திறந்தார். இலவசக் கல்வி, சீருடை, மதிய உணவு, உதவித்தொகை என வரிசையாக ஏழை எளிய மாணவர்களுக்கு எடுத்து எடுத்துக் கொடுத்தார் . விளைவு, 1951 ஆம் ஆண்டு 16 விழுக்காடாக இருந்த தமிழ்நாடின் எழுத்தறிவு விகிதம், 1970 இல் 40 விழுக்காடாக 3 மடங்கு அதிகரித்தது.


காமராஜர் கல்வி: ஓர் இந்திய ஒப்பீடு:

இத்தகைய வளர்ச்சியை, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் எட்டிப் பிடிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் மற்ற மாநிலங்களை காட்டிலும் 10 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தினார் காமராஜர். இதைத்தான் தொலைநோக்குப் பார்வை என்கிறோம். காமராஜரின் தொலை நோக்குப் பார்வைக்கு இன்னும் விரிவான உதாரணம் தர வேண்டும். இந்திய அளவில், இந்திய கல்வியாளர்கள், இந்திய கல்விக் கொள்கை, இந்தியாவின் உயர்கல்வியை எப்படி உன்னதமானதாக மாற்றுவது என்று சீரிய முறையில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அடிப்படை கல்வியின் நீள அகலங்களை அதிகரிக்கச் செய்தார் காமராஜர். அது உயர்கல்வியில் சென்று வேர் பிடிக்கும் என்று காமராஜர் தெரிந்து வைத்திருந்தார். அதன் விளைவாக இன்றும் கல்வியில் இந்தியாவிற்கு முன் உதாரணமாகவும் முன்னேறிய நாடுகளுக்கு இணையாகவும் வளர்ந்து நிற்க அடித்தளமிட்டார் காமராஜர்.


காமராஜரின் கல்விப் புரட்சி: உலகளாவிய ஒப்பீடு:

அமெரிக்காவின் அருகே இருந்து கொண்டு, அமெரிக்காவை ஆட்டிப் படைத்தவர் பிடல் காஸ்ட்ரோ. அங்கு , 1959 ஆம் ஆண்டு புரட்சியின் மூலமாக ஆட்சியைப் பிடித்த பிடல் காஸ்ட்ரோ, எடுத்தவுடன் கிராமப்புற மற்றும் அனைவருக்குமான கல்வி திட்டத்தை அமலாக்கம் செய்தார். அதனை காமராஜரின் கல்விக் கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். இலங்கை அரசு 1945 ஆம் ஆண்டு கொண்டு வந்த, மதிய உணவுடன் கூடிய இலவச கல்வி முன்னெடுப்பிற்கு ஒப்பானது.

1950 களில் தென்கொரிய அரசு, வறுமையை விரட்டி அடிக்க, பொருளாதார முன்னேற்றத்திற்கு விதைபோட கல்வியையே அடிப்படை ஆயுதமாக பயன்படுத்தியது. அதே போன்ற பணியை காமராஜர் தமிழ்நாட்டில் செய்து முடித்தார்.

ஐரோப்பாவில் ஸ்காண்டநேவிய நாடுகள், அனைவருக்கும் கட்டாய இலவச தரமான கல்வி வேண்டும் என்று முடிவு செய்து , களத்தில் இறங்கினார்கள். அத்தகைய களச் செயல்பாட்டுக்கு ஒப்பானது காமராஜரின் கல்விக்கான செயல் திட்டம்.

காமராஜரின் தனித்துவம்:

காமராஜரின் தனித்துவம் எங்கே இருக்கிறது என்று கேட்போருக்கு மேலும் ஒரு முக்கியமான உதாரணத்தைக் கூற முடியும். உலகின் பல வளர்ந்த நாடுகள் முதலில் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். பின்னர், அதனையே முதலீடாகக் கொண்டு, கல்வி வளர்ச்சியை நோக்கி நகர்வோம் என்று சிந்தித்து, செயலாற்றி வந்தன. ஆனால், காமராஜர் கல்வியின் மூலம் பொருளாதார வளர்ச்சிக்குத் திட்டமிட்டார். காமராஜரின் பாதையே சரியானது என்பதைக் காலம் நிரூபித்தது. எனவே, காமராஜரின் கல்விக்கான பாதை தனித்துவமானது என்று குறிப்பிடுவதில் தவறில்லை.


அதிசயமான ஆசிரியர் தேர்வு முறைகள்:

ஆயிரக்கணக்கான பள்ளிகளை, கோடிக்கணக்கான ரூபாய் செலவில், தமிழ்நாடு எங்கும் உருவாக்கி விட்டார் காமராஜர். இந்தப் பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் வேண்டுமே.
மாநிலம் முழுவதும் பல பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. அப்படி ஒரு ஊரில், ஒரு பள்ளிக்கூடம் பூட்டிக் கிடந்தது. அந்த ஊருக்கு ஆட்சியர் வந்தார். மக்கள் அவரிடம் முறையிட்டனர். “ஐயா! பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தீர்கள். ஆனால், வாத்தியார் இல்லையே? எங்கள் குழந்தைகள் எப்படிப் படிப்பார்கள்?” என்று கேட்டார்கள். ஆட்சியர் சொன்னார், “நாங்களும் தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். படித்தவர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்களே. என்ன செய்வது?” என சிறிது நேரம் யோசித்தார்‌. “உங்க ஊரில் படித்த பையன்கள் யாரேனும் இருக்கிறார்களா?” என்று அந்த மக்களையே திருப்பிக் கேட்டார். அவர்கள் தங்களுக்குள் சிறிது நேரம் பேசிவிட்டு, “ஆமாங்கய்யா! எங்க ஊர்ல கூட ஒரு பையன் ஏதோ ரொம்ப நாளா படிச்சிட்டு இருந்தான். இப்பத் தான் பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சா அவன் காட்டு வேலைக்குப் போயிட்டு இருக்கிறான்.” என்றனர்.


உடனடியாக, அந்தப் பையனை கையோடு அழைத்து வரும்படி கூறினார் . அந்தப் பையன் வரும் வரை காத்திருந்தார். அந்தப் பையன் வந்ததும், “தம்பி! நீ என்ன படித்திருக்கிறாய்?” என்று கேட்டார். “ஐயா, 11 ஆவது படித்திருக்கிறேன்” என்றான். “ஓ! எஸ் எஸ் எல் சி படித்திருக்கிறாயா? ரொம்ப சந்தோஷம். சரி! இன்னிலிருந்து, நீதான் இந்த பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார். ஹெட் மாஸ்டர் எல்லாம். இந்தா சாவியைப் பிடி.” என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்த பள்ளிக்கூட சாவியை வாங்கி, அந்த மாணவரிடம் கொடுத்து விட்டார். அந்த மாணவர் அவ்வூரில் இருந்த எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிக்க வைத்தார். தானும் படித்தார். படித்துப் படித்து முதுகலை தமிழாசிரியர் ஆனார் . அவரிடம் தான் நான் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் படித்தேன்.பின்னர் அவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகி ஓய்வு பெற்றார். இப்படி ஆசிரியர் நியமனத்தை நடைமுறை சார்ந்து சிந்திக்க வழி காட்டினார் காமராஜ். அதேசமயம், ஆசிரியர்களின் தகுதி திறமை ஆகியவற்றை மேம்படுத்த, பயிற்சி அளிக்க, நன்கு பயிற்சி பெற்று பணியில் சேர, ஆசிரியர் பயிற்சி மையங்களையும் நிறுவினார் .


இன்றும் தேவைப்படும் காமராஜர்:

1.எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி என்ற இலக்கு நிறைவடையும் வரை.
2.அனைவருக்கும் இலவச கட்டாய சமமான தரமான கல்வி என்ற ஜனநாயக கல்விக் கடமை நிறைவேறும் நாள் வரும் வரை.
3.வறுமையும் கல்லாமையும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள். இதில் உள்ள சிக்கல்கள் நீடிக்கும் வரை.
4.பள்ளி இடைவிலகல் முற்றாக தவிர்க்கப்படும் வரை காமராஜர் கை கொடுப்பார்.
5.ஏதுமற்ற அனைவருக்கும் , ஏற்ற மிகு தரமான கல்வி பெறுவதற்கு காமராஜரே ஒளிவிளக்கு .
6.பெண் குழந்தைகள் பெரிய ஆளுமைகளாக மாற்றம் பெற இன்னும் நமக்கு காமராஜர் தேவைப்படுகிறார்.

கட்டுரையாளர்:

நா.மணி, பேராசிரியர். தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share