அன்று பாட்டி சுட்ட வடைக்கும் இன்று அம்மா சுடும் வடைக்கும் கூட வித்தியாசம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் நாம். இந்த நிலையில் சுவையான முறுக்கு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வீட்டிலேயே செய்ய இந்த கதம்ப முறுக்கு ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
புழுங்கலரிசி – அரை கிலோ
பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு
பொட்டுக்கடலை – தலா 100 கிராம்
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
புழுங்கலரிசி – 100 கிராம் (வறுத்துப் பயன்படுத்த)
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புழுங்கலரிசியை நீரில் களைந்து எடுத்து நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பைத் தனித்தனியே வறுத்து இளம் சிவப்பாக எடுத்து வைக்கவும். பொட்டுக்கடலையை லேசாகச் சூடேற்றி வைக்கவும்.
100 கிராம் புழுங்கலரிசியை வாணலியில் போட்டுப் பொரியும் வரை வறுத்து வைக்கவும். அரிசியுடன் வறுத்த பொருள்களையும் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்துவந்து இதனுடன் மிளகாய்த்தூள், ஓமம், வெண்ணெய், எள், உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும்.
பிறகு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணெயைக் காயவிடவும். சிறு சிறு தட்டுக்களைக் குப்புறப்போட்டு எண்ணெய் தடவி, மாவை முறுக்கு அச்சில் போட்டு, தட்டுகளில் முறுக்குகளாகப் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு இருபுறமும் திருப்பிவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.
