வரகு, ராகி ஆகிய சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் காரங்கள் தனிச் சுவையைத் தரும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிக அதிகம். மாவுச்சத்து குறைவு. அப்படிப்பட்ட வரகில் பாரம்பரியமான இந்த வரகு சீப்பு சீடை செய்து ருசிக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வரகு மாவு, அரிசி மாவு – தலா கால் கிலோ
பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 100 கிராம்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து அரைத்துச் சலித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வரகு மாவு, அரிசி மாவு, அரைத்த மாவு வகைகள், வெண்ணெய், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து, தேங்காய்ப்பாலைச் சூடேற்றிக் கலந்து, மாவை முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்).
பிறகு சீப்பு சீடை அச்சில் மாவைப் போட்டு ஒரு கனமான ஷீட்டில் நீளமாகப் பிழிந்து இரண்டு இன்ச் சைஸுக்கு கட் செய்து அதை ஆள் காட்டி விரலில் சுற்றி ஒட்டித் தனித்தனியே எடுத்து வைக்கவும்.
எண்ணெயை நன்கு காயவைத்துச் செய்துவைத்துள்ள சீப்பு சீடைகளைப் போட்டு அடுப்பைக் குறைத்து நிதானமாக வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுக்கவும்.
குறிப்பு:
வரகு மாவு கடைகளில் கிடைக்கும். இல்லையென்றால் வரகு, பச்சரிசி இரண்டையும் நீரில் களைந்து காயவைத்து வறுத்த பருப்பு வகைகள் சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளலாம்.