உண்மையான ஒட்டுண்ணிகள் யார்?

Published On:

| By எஸ்.வி.ராஜதுரை

ஆனந்த் டெல்டும்டே

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

ஒரு நெல் மணியையோ, ஒரு மீட்டர் துணியையோ, அல்லது  இருப்பிடத்திற்கான ஒரு செங்கல்லையோ ஒருபோதும் உற்பத்தி செய்யாத ஒரு தொழிலின் உச்சத்தில் நின்று கொண்டு, இந்தியாவின் வேலையற்ற இளைஞர்களை ஒட்டுண்ணிகள் என்றும் கரப்பான் பூச்சிகள் என்றும் அழைப்பதற்கு அசாதாரணமான துணிச்சல் அல்லது ஒருவேளை யதார்த்தத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறை இருக்க வேண்டும். இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இந்தச் சாதனையை துல்லியமாகச் செய்துள்ளார்.

மற்றவர்களின் உழைப்பால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்ட ஒரு நீதிமன்றம் வழங்கும் பெரும் செளகரியத்தில் இருந்து கொண்டு பேசிய அவர், வேலை கிடைக்காத இளம் இந்தியர்களை “ஒட்டுண்ணிகள்” என்றும் “கரப்பான் பூச்சிகள்” என்றும் வர்ணித்தார். சக்திவாய்ந்தவர்களால் தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்படும் ஒன்றின் மூலம் -’அவமரியாதை’ என்பதன் மூலம் – இந்திய இளைஞர்கள் அவருக்குப் பதிலளித்தனர்.

ADVERTISEMENT

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிறந்தது. மூன்று வாரங்களுக்குப் பிறகு அதன் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கரப்பான்பூச்சி முகமூடிகளுடன், புத்தகங்களையும் தேசியக் கொடியையும் ஏந்தியபடி, மத்தியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அணிவகுத்து வந்தனர். 

சமுதாயத்தின் உறுப்பினர்கள் எதிரெதிர் துருவங்களாகப் பிளவுபட்டுக் கொண்டிருக்கும்  நிலை ஆழமடைந்துள்ளதால், தலைமை நீதிபதி  பதவியில் நீடிக்காமல் போகக்கூடும். ஆனால், அவர் கவனக் குறைவுடன் கூறிய கருத்து –  அது  ஒரு சாராரின் கடுங்கோபமும் இன்னொரு சாராரின் எதிர் கடுங்கோபமும் எழுப்பிய இரைச்சலால் மறைக்கப்பட்ட ஒரு கேள்வி – காத்திரமான பதிலைப் பெறத் தகுதியுள்ளது. தலைமை நீதிபதி பயன்படுத்திய மொழி புண்படுத்தக்கூடியதா என்பதல்ல பிரச்சினை? நிச்சயமாக அது புண்படுத்தக்கூடியதுதான். ஆனால் இந்தக் குடியரசின் பொருளாதாரத்தில், மற்ற அனைவரும் பிழைத்து வாழும் செல்வத்தை உண்மையில் உற்பத்தி செய்கிறவர்கள் யார் என்பதுதான் அந்தக் கேள்விக்கான சரியான பதில்.

ADVERTISEMENT

ஒவ்வொரு பள்ளிக்குழந்தையும் ஒரு காலத்தில் கற்றுக்கொண்டதும், ஒவ்வொரு அரசியல் அமைப்பும் மறக்கச் சதி செய்ததுமான அடிப்படை உண்மைகளிலிருந்து தொடங்குவோம்.

செல்வம் என்பது இயற்கையின் மீது செலுத்தப்படும் உழைப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலத்தை உழுது, விதையை நட்டு, அறுவடையை மண்டிக்குக் கொண்டு செல்லும் விவசாயி, உண்மையான ஒன்றை, உணவை, உற்பத்தி செய்கிறார். அது இல்லாமல் போனால் , தலைமை நீதிபதி,  கேபினட் அமைச்சர்கள்,  செய்தியேட்டின் ஆசிரியர் ஆகியோர் சில வாரங்களுக்குள் இறந்துவிடுவார்கள்.

ADVERTISEMENT

செங்கற்களை அடுக்கும் கட்டுமானத் தொழிலாளிதான் நிர்வாகம், நீதி வழங்குதல் ஆகியவற்றுக்கான  அமைப்பு தன் பணிகளை நடத்தும் உறைவிடத்தை உருவாக்குகிறார்.

நெசவாளர், இயந்திர வல்லுநர், நகரத்தை  அதன் சொந்தக் குப்பையில் மூழ்கிவிடாமல் காக்கும் துப்புரவுத் தொழிலாளி, செவிலியர், ஆசிரியர், பொறியாளர், மருத்துவர்—இவர்கள்தான் மற்ற அனைத்துமே சார்ந்திருக்கும் பொருளாய, சமுதாய  நிலைமைகளை உருவாக்குகிறார்கள்.

நீதிபதி எதை உருவாக்குகிறார்? இது மரியாதைக் குறைவான கேள்வி அல்ல; ஆனால் மிகவும் மரியாதைக்குரிய கேள்வி. ஏனெனில் அக்கேள்வி  நீதிமன்றம் என்ற நிறுவனத்தை மிக ஆழமாகக் கருத்தில் கொண்டு, அது உண்மையில் என்ன பங்களிக்கிறது என்பதை ஆராய்கிறது. தகராறுகளைத் தீர்ப்பது, ஒழுங்கைப் பராமரிப்பது என்ற சேவையை நீதிபதி வழங்குகிறார். ஆனால் நீதிபதி பொருள்வகையான  எதையும் உருவாக்குவதில்லை.  மாறாக, அவர் முற்றிலுமாக பொருட்களை உருவாக்குபவர்களிடமிருந்து கறக்கப்படும் உபரியைக் கொண்டே வாழ்கிறார். ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், ஒவ்வொரு அதிகாரிக்கும்,  இந்தியா தனது  காலனியாதிக்கவாதிகளையே மலைக்க  வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள நிர்வாகம், ஒழுங்காற்று முறை, நீதி பரிபாலனம் ஆகியவை அடங்கிய பிரமாண்டமான அமைப்பிலுள்ள  ஒவ்வொரு உறுப்பினருக்கும்  இந்த உண்மை பொருந்தும்.

அரசியல் பொருளாதாரத்தின் மிகப் பழமையான கேள்வி

அரசியல் பொருளாதாரத்தின் மிகப் பழமையான அவதானிப்புகளில் ஒன்றைப் பார்போம். 18-ஆம் நூற்றாண்டில் பிசியோகிராட்டுகள் (physiocrats) என்று அழைக்கப்பட்ட பிரெஞ்சு பொருளாதாரவாதிகள் சமுதாயத்தை உற்பத்தி செய்யும் வர்க்கம், உற்பத்தி செய்யாத வர்க்கம் ( வேளாண் தொழில் செய்பவர்கள் மட்டுமே சமுதாயத்திற்கு வேண்டியதை உற்பத்தி செய்கிறார்கள்; கைவினைஞர்கள், தயாரிப்பாளர்கள், வணிகர்கள் ஆகியோர் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில்  மாற்றம் செய்கிறார்கள் அல்லது மூலப் பொருட்களை ஒன்று சேர்க்கிறார்கள்; ஆனால் அவர்கள் பயன்படுத்தும் மூலப் பொருட்கள், உயிர்பிழைப்புக்காக அவர்கள் நுகரும் பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பைவிடக் கூடுதலாக புதிய செல்வத்தையோ உபரியையோ உருவாக்குவதில்லை என்பது பிசியோகிராட்டுகளின் கருத்து- மொழிபெயர்ப்பாளர்) எனப் பாகுபடுத்தினர். ஆதாம் ஸ்மித் உற்பத்தி செய்யும் உழைப்பையும் உற்பத்தி செய்யாத உழைப்பையும் வேறுபடுத்திக் காட்டினார்.

இதன் அடிப்படையில் மார்க்ஸ் தனது உழைப்பு மதிப்புக் கோட்பாட்டை உருவாக்கினார்: அனைத்து மதிப்பும் உழைப்பால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது; உபரி மதிப்பு – ஒரு தொழிலாளி தான் உயிர் பிழைப்பதற்குத் தேவையானதைவிடக் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் உபரி – உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களாலும் அபகரிப்பைப் பராமரிப்பதே வேலையாகக் கொண்ட அரசு, மத நிறுவனம், சட்ட அமைப்பு ஆகியவற்றாலும் அபகரிக்கப்படுகிறது. இந்தப் பகுப்பாய்வின்படி பார்த்தால், தலைமை நீதிபதி சமூக மதிப்பை உருவாக்கும் ஒருவர் அல்ல. அவர், தொன்மையான அர்த்தத்தில், ஓர் ஒட்டுண்ணி வர்க்கத்தின் உறுப்பினர் -சமுதாயத்தில் தான் வகிக்கும் பாத்திரத்திற்காக தாராளமாக ஊதியம் பெறுகிறவர்.

இந்தியாவின் 2024-25ஆம் ஆண்டுப் பொருளாதார ஆய்வின்படி, விரிவடைந்து வரும் இந்தியா, தனது தொழிலாளர் சக்திக்கு இடமளிக்க, 2030ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் நாடு சுமார் 7.85 மில்லியன் விவசாயம் அல்லாத வேலைகளைச் செய்பவர்களை உருவாக்க வேண்டும். வேலை கிடைக்காத இளைஞர்கள் – தலைமை நீதிபதியின் வகைப்பாட்டின்படி “ஒட்டுண்ணிகளா’கவும், “கரப்பான் பூச்சிகளா”கவும் இருப்பவர்கள் -வேலையற்றவர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்களிடம் அபிலாசையோ, வேலை செய்வதற்கான விருப்பமோ இல்லாதது அல்ல. மாறாக, அதற்குக் காரணம், உழைப்பு அதிகம் பயன்படுத்தும் உற்பத்தியை விட மூலதனம் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்களுக்குச் சேவை செய்வதற்காகவும்; ஒரு காலத்தில் இலட்சக்கணக்கானோரை ஈர்த்த சிறு உற்பத்தித் துறையைச் சிதைப்பதற்காகவும்; கிராமப்புற வாழ்க்கையை வாழத் தகுதியற்றதாக ஆக்கும் அளவுக்கு விவசாயக் கூலியைக்  குறைவாக வைத்துக்கொண்டு, அவ்வாழ்க்கைக்கு மாற்றாக அமையக்கூடிய நகர்ப்புற வேலை வாய்ப்பை வழங்காமல் இருப்பதற்காகவும்; மேலும், பெரும்பான்மையான மக்கள் சுருங்கிவரும்  வேலை வாய்ப்புகளுகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டிருக்க, வளர்ச்சியின் பலன்களை ஒரு குறுகிய பிரிவினரிடம் குவிப்பதற்காகவும் பொருளாதாரம் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுகளைச் செய்தது யார்? எதையும் உற்பத்தி செய்யாத, உற்பத்தி செய்பவர்கள் மீது விதிக்கப்படும் வரிகளிலிருந்து மட்டுமே தங்கள் வாழ்வாதாரத்தைப் பெறும் அரசியல்வாதிகள்; அவற்றை நிர்வகித்தது எது?  அது இந்திய ஆட்சிப் பணி -சர்தார் பட்டேலால் குடியரசின் “எஃகுச் சட்டகம்” என்று புகழப்பட்ட ஒன்று; அது கோட்பாட்டளவில்  எந்த சேவைகளை வழங்க வேண்டுமோ  அதைச் செய்வதைவிட, அதன் சொந்த உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சொத்துடைமை வர்க்கங்கள் ஆகியோரைப் பாதுகாப்பதில் அதிக செயல்திறன் மிக்கதாக இருப்பது  நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையைச்  சட்டபூர்வமாக்கியது எது? நீதித்துறைதான்; அது தொழிலாளர் உரிமைகள், நிலத்திற்கான உரிமைகள், ஏழைகளின் உரிமைகள் ஆகியன  தொடர்பான வழக்குகளில் பல தசாப்த காலத்தை எடுத்துக் கொண்ட தீர்ப்புகளின் மூலம் ஒரு சாதனையை உருவாக்கியுள்ளது; அதாவது, தலைமை நீதிபதி (CJI) வேலையில்லாதவர்களைப் பொருத்தவரை மிகக் கறாராக அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் பரிசீலிப்பதைப் போல, அதே அளவுகோலைக் கொண்டு இந்த அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது அவருக்குச தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

தவறல்ல, தொடர்ந்து வரும் போக்கு

மேலே கடைசியாகச் சொல்லப்பட்ட விஷயத்தைப் பொருத்தவரை, உண்மையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்; ஏனெனில் அதுதான்  மிக முக்கியான பிரச்சினையை  நேரடியாகச் சொல்கிறது. இன்று நமது குடியரசு ஒரு பரிதாபகரமான நிலையில் – அதாவது ஜனநாயகம் நெருக்கடிக்குள்ளாகி, குடிமை உரிமைகள் முற்றுகையிடப்பட்டு, நிறுவனங்கள் வலுவிழந்து, பொருளாதாரம் சீர்குலைந்து இருப்பதற்கு – நீதித்துறைதான் பெரும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அரசியலமைப்புச் சட்டப்படி இந்தக் குடியரசின் பாதுகாவலராகத் திகழ்வது அதுவே. அதன் தோல்விகள் சிறியவையோ, அவ்வப்போது நிகழ்ந்தவையோ அல்ல; அவை  கட்டமைப்பு சார்ந்த  தோல்விகளாகும்.

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோதும், காஷ்மீர் மக்கள் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டு அரசியலமைப்புக்கு முரணான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் உச்ச நீதிமன்றம் காட்டிய செயலற்ற தன்மை; அரசியல் கட்சிகளுக்கான நிதியுதவியை முறையான ஒளிவுமறைவு கொண்டதாக மாற்றிய ‘தேர்தல் பத்திரத் திட்டம்’ (Electoral Bonds) பற்றிய அதன் மௌனம்; பிகாசஸ் (Pegasus) உளவுக் கருவி விவகாரத்தில் செயலற்ற்  தன்மை ; மாற்றுக்கருத்து கொண்டவர்கள் மீது  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு ) சட்டத்தை (UAPA ) பயன்படுத்துதல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்காமை; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) பாரபட்சத் தன்மையை இரத்து செய்யத் தவறியமை; சட்டத்திற்குப் புறம்பான தண்டனையாகப் பயன்படுத்தப்படும் ‘இடிப்பு அரசியல்’ (demolition politics) மீது அது காட்டிய  திட்டமிட்ட அலட்சியம்; அரசியலமைப்பு ரீதியான தலையீடு மிக அவசியமாக இருக்கும் தருணங்களில் நிர்வாக அதிகாரத்தின் ஆதிக்கத்திற்கு முன் பின்வாங்கியவமை – இவை அனைத்தும் தனிப்பட்ட தவறுகளின் பட்டியல் அல்ல. இது தொடர்ந்து நிகழும் போக்கு; சுதந்திரமாகச் செயல்படும் கடமையை விட, அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்லும் வசதியான பாதையைத் தேர்ந்தெடுத்த ஒரு நிறுவனத்தின்  போக்குதான் இது.

சட்டத் துறையும் பரந்த அளவில் இதேபோன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஒரு வழக்கறிஞர் புதிதாக எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஒரு வழக்கறிஞரின் வருமானம் முழுவதும் தகராறுகளின் இருப்பிலிருந்தே வருகிறது; ஆனால் பகுத்தறிவுடன் கட்டமைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில், அத்தகைய தகராறுகள் உருவாகாமலோ, தொழில்முறை இடைத்தரகர்கள் இல்லாமலோ தீர்க்கப்பட்டிருக்கக்கூடும். இத்துறையின் அசாதரணமான சிக்கல் தன்மை,  வெளியாட்கள் நுழைய முடியாத வகையில்  இத்துறையின்  அதிகாரபூர்வ விதிகளும் நடைமுறைகளும்  சிக்கலானவையாகவும் புரியாதவையாகவும்  இருப்பதால், பல ஆண்டுக்கால சிறப்புப் பயிற்சியோ, கணிசமான நிதி வசதியோ இல்லாதவர்களுக்கு நீதித்துறை எட்டாத ஒன்றாக இருப்பது தற்செயலானவை அல்ல. ஒரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு வணிக முன்மாதிரிதான். சாதாரண மக்களுக்கு நீதி எட்டாத ஒன்றாக இருக்கும் வரை, நீதியைப் பெற்றுத் தரும் இடைத்தரகராகச் செயல்படும் அந்தத் தொழில்முறை வல்லுநரின் தேவை தவிர்க்க முடியாததாகிறது. நீதியை செலவு குறைவானதாகவும், விரைவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றக்கூடிய ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் வழக்கறிஞர்கள் எதிர்த்துள்ளனர் – ஏனெனில், பொதுவெளியில் அவர்கள் குறை கூறும் அந்தச் சீர்கேடான அமைப்பில்தான்  அவர்களுக்கு நேரடியான பொருளாதார நலன் உள்ளது.

இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான வாதம் அல்ல. தங்கள் நலன்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பிலிருந்து பயனடைபவர்கள், தங்களுக்கு மட்டுமே  பொருந்தக்கூடிய சொற்களைக் கொண்டு (எ.கா. ‘ஒட்டுண்ணிகள்’) அந்த அமைப்பிற்கு வெளியே தள்ளப்பட்டவர்களை அழைப்பதில் வெளிப்படும் பாசாங்குத்தனத்திற்கு எதிரான வாதம் இது. எந்தப் பயனுள்ள பங்களிப்பும் இன்றி மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர் ‘ஒட்டுண்ணி’ என்றால், சட்டத் தொழில் – தீர்வு காணப் பல தசாப்தங்கள் ஆகக்கூடிய ஒரு வழக்கின் விசாரணைக்காக, ஒரு விவசாயி பல மாதங்கள் உழைத்துச் சேர்க்க வேண்டிய பணத்தை கட்டணமாக வசூலிக்கும் இத்தொழில் – தலைமை நீதிபதி (CJI) தாராளமாக வழங்கிய  ஓட்டுண்ணிகள் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு மற்றவர்களை விட அதிகத் தகுதி உடையது.

பரம்பரை வழிக் குடியரசு: தலைகீழ் குடியரசு

அடுத்ததாக அரசியல் வர்க்கம் உள்ளது;  அதன் மீது  ஆத்திரம் அல்லது கோபம் கொள்வதற்குத் தேவையே இல்லாத நிலை உருவாகிவிட்டது. அரிதான விதிவிலக்குகளைத் தவிர, இந்திய அரசியல் ஒரு பரம்பரைத் தொழிலாகச் சீரழிந்துவிட்டது; ஒரு காலத்தில் ஒழிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அதே நிலப்பிரபுத்துவ முறையை நினைவூட்டும் வகையில், குடும்ப வலைப்பின்னல்கள் மூலம் அதிகாரம் கைமாற்றப்படுகிறது. நேர்மையற்றவர்களுக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இது மிகவும் இலாபகரமான தொழில்களில் ஒன்றாகவும் மாறியுள்ளது.

மற்ற எந்தக் குழுவையும் விட, இது  பொது நிதியிலிருந்தும் – இறுதியில், சமுதாயம் சார்ந்திருக்கும் பயிர்களை வளர்ப்பவர்கள், பொருள் தயாரிப்பவர்கள், கட்டுமானம் செய்பவர்கள்,  பொருட்களை  எந்த இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு  கொண்டு செல்பவர்கள் ஆகியோரின் உழைப்பைக் கொண்டும் – வாழும் ஓர் ஒட்டுண்ணி வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கு ஈடாக இந்த ஒட்டுண்ணி வர்க்கம்  நிர்வாகத்தை வழங்குவதில்லை; மாறாக,  மக்களிடையே அடையாள அரசியல் சார்ந்த கோப வெறியை உருவாக்குதல், வகுப்புவாத அடிப்படையில் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துதல், மதவெறிப் போதையூட்டுதல், மதவெறிப் பிரச்சாரம் ஆகியவற்றை வழங்குகிறது. செயல்பாட்டிற்கு மாற்றாக பிரசாரத்தை வழங்குகிறது.

இத்தகைய திட்டமிட்ட தலைகீழ் மாற்றத்தைக் குறிப்பதற்கு  செவ்வியல் இந்தியத் தத்துவ மரபில் ‘விபரீதம்’  என்ற சொல் உள்ளது; இது தலைகீழான அல்லது நேர்மாறான நிலையைக் குறிப்பதோடு, யதார்த்தத்திற்கும் அதைப் பற்றிய சித்தரிப்பிற்கும் இடையிலான உறவு வேண்டுமென்றே குழப்பப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட சூழலையும் குறிக்கிறது. சமகால இந்தியாவின் இந்த ‘விபரீத’ பொருளாதாரத்தில், எதையும் உற்பத்தி செய்யாதவர்களும் அவர்களின் வேலையின்மைக்கு ஓரளவு காரணமானவர்களும் வேலை செய்ய விரும்பியும் வேலை கிடைக்காதவர்களை  ‘ஒட்டுண்ணிகள்’ என்று அழைக்கிறார்கள். உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களை விட, அவற்றை வணிகம் செய்பவர்களுக்கே அதிக மதிப்பு அளிக்கப்படுகிறது. வீடுகளைக் கட்டுபவர்களால் அவற்றில் வசிக்க முடிவதில்லை. ஆடைகளைத் தயாரிப்பவர்கள் கந்தல் துணிகளை அணிகிறார்கள். ஆனால் ஒட்டுண்ணிகளோ மிக முக்கியப் பிரமுகர்களாக  மாறுகிறார்கள்.

தலைமை நீதிபதி  தன்னை அறியாமலேயே ஒரு பொது சேவையைச் செய்துள்ளார். நாம் உரத்த குரலில் கேட்காதவாறு இந்தக் குடியரசின் அரசியல் பொருளாதாரம் கவனமாகத் தடுத்து வைத்திருந்த ஒரு கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். வேலையில்லாதவர்கள் ஒட்டுண்ணிகளா என்பது  பிரச்சினையல்ல – மாறாக, சொந்த மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாத  ஒரு பொருளாதாரத்தில், கண்ணியமான வாழ்வாதாரம்  தரப்படும் என்ற அரசியலமைப்பு வாக்குறுதியை ஏழு தசாப்தங்களாக நிறைவேற்றத் தவறிய ஒரு குடியரசில், அதிகாரத்தில் இருப்பவர்களின் குழந்தைகள் வாய்ப்புகளைத் தொடர்ந்து பெறுவதும் அதிகாரமற்றவர்களின் குழந்தைகள் வறுமையைத் தொடர்ந்து பெறுவதும் இயல்பாக நடக்கும் ஒரு சமுதாயத்தில் உண்மையில் யார் யாரைச் சார்ந்து வாழ்கிறார்கள்? 

கரப்பான் பூச்சி எல்லாவற்றுக்கும் தாக்குப் பிடித்து வாழும் உயிரினங்களில் ஒன்று என்பதைக் குறிப்பிடுவது அவசியம். அதைவிட மிகச் சிறப்பான உயிரினங்களை ஒழித்துக்கட்டிய நிலைமைகளிலிருந்து தப்பிப் பிழைத்த உயிரினம் அது. எனவே, சிந்தித்துப் பார்க்கையில், அது எதைக் குறிக்கிறதோ அதைக் கண்டு அஞ்சுபவர்களால் அப்படி அழைக்கப்படுவது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல.

 (Tamil translation of  Anand Teltumbde’s ‘ ‘Who are the real parasites?’;Courtesy:  Frontline, 09.06.2026)

Photo of author
எஸ்.வி.ராஜதுரை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share