சவுதியில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மீனவரையும் இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என பிரதமருக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளநிலையில், இன்று மீண்டும் பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமேஸ்வரம், நாகை, கடலூர் உள்ளிட்ட மீனவர்கள் 61 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மீனவர் என்று மொத்தம் 62 மீனவர்கள் சவூதி அரேபியாவில் நிர்க்கதியாக உள்ளனர். இவர்களை, கடந்த 2013ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு எடுத்துக்கொண்ட நிறுவனம் இப்போது இவர்களுக்கு வேலையும் அளிக்காமல், ஊதியத்தையும் கொடுக்காமல், அவர்களது கடவுச் சீட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை சொந்த நாட்டுக்கும் அனுப்பிவைக்காமல் உள்ளது. இப்படி, சவுதியில் சிக்கித்தவிக்கும் மீனவர்களை அந்நாட்டு அரசிடம் தூதரகம்மூலம் பேசி, மீனவர்களை தமிழகம் அழைத்துவர பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
