பின்னணி பாடகி ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் இன்று (ஜூலை 12) தகனம் செய்யப்பட்டது.
பின்னணி பாடகி ஜானகி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக பாடாமல் இருந்து வந்தார்.
2016ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்து கல்பனகள் திரைப்படத்தில் அம்மபூவினும் பாடலை கடைசியாக பாடியிருந்தார்.
அதைத்தொடர்ந்து மைசூருவில் தங்கியிருந்த ஜானகி உடல் நல குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை, ”பின்னணி பாடகி ஜானகி 11 ஜூலை 2026 அன்று பிற்பகல் 12:49 மணிக்கு மைசூருவில் உள்ள அப்போலோ பிஜிஎஸ் (Apollo BGS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே, அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. உடனே அவர் பரிசோதிக்கப்பட்டு, அடுத்தகட்ட சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
பல்வேறு துறை சார்ந்த மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்தபோதிலும், சிகிச்சையின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தரப்படுத்தப்பட்ட மருத்துவ நெறிமுறைகளின்படி உடனடியாக அவருக்கு மேம்பட்ட சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருக்கு அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது. எஸ். ஜானகி 11 ஜூலை 2026 அன்று இரவு 7:30 மணிக்கு காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டது.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று (ஜூன் 12) மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்ட பாடகி ஜானகி உடலுக்கு பாடகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னணி பாடகர்கள் மனோ, சுஜாதா, சித்ரா உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில் இன்று (ஜூலை 12) மாலை மைசூருவில் உள்ள ஜானகியின் பண்ணை வீட்டில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டு 30 துப்பாக்கி குண்டுகள் முழங்கம் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
