மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் 8வது சம்பள கமிஷன் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அந்த செய்தி, மத்திய அரசு 2025ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் சம்பள கமிஷன் சலுகைகளை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறது. இதனால், ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வு மற்றும் 8வது சம்பள கமிஷன் சலுகைகள் கிடைக்காது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் 8வது சம்பள கமிஷன் மற்றும் DA உயர்வு சலுகைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி போலியானது என்றும், மத்திய அரசு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் PIB தெளிவுபடுத்தியுள்ளது.
PIB-யின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு தனது X பக்கத்தில், “வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், மத்திய அரசு 2025ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வுக்குப் பிந்தைய சலுகைகளான DA உயர்வு மற்றும் சம்பள கமிஷன் திருத்தங்களை திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது!” என்று பதிவிட்டுள்ளது.
PIB வெளியிட்டுள்ள தகவலின்படி, CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-ல் ஒரு சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அது, விதி 37(29C) ஆகும். இந்த விதி பணியின் போது ஒழுங்கீனமான நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவன ஓய்வூதியதாரர்கள் தொடர்பானதாகும். திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒரு பொதுத்துறை நிறுவன ஊழியர், ஒழுங்கீனமான நடத்தைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டால் அவர் தனது ஓய்வூதிய சலுகைகளை இழப்பார். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் இவ்வாறு பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது. 8வது சம்பள கமிஷன் மற்றும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு PIB போன்ற அரசு அமைப்புகளின் அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
