பார்த்திபன் – ப்ளூ சட்டை மாறன் : கொடும்பாவி எரிப்புக்கு பதில்!

சினிமா

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நடித்துத் தயாரித்துள்ள படம் இரவின் நிழல் இந்தப்படம் கடந்த ஒரு வருடகாலமாக உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஜூலை 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட இரவின் நிழல் படைப்பு ரீதியாகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. அதேவேளை, நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் தமிழ் திரைத்துறைக்குப் பெருமை என்று திரையுலகினரால் பாராட்டப்பட்டு வருகிறது. படத்திற்குத் திரையரங்குகளில் வணிகரீதியாக எதிர்பார்த்த வசூல் இல்லை என்ற நிலையில் தமிழகம் முழுவதும் நடிகர் பார்த்திபன் படம் வெளியான திரையரங்குகளில் இடைவேளை நேரத்தில் நேரில் தோன்றி பார்வையாளர்களிடம் பேசி வருகிறார். இதன் காரணமாகக் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் வசூல் அதிகரித்து உள்ளது. படம் பற்றிய சாதகமான அல்லது எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இரவின் நிழல் விவாத பொருளாக இருந்து வருகிறது. படம் வெளியான ஜூலை 15 அன்று திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை. ஏற்கனவே இதுபோன்ற படங்கள் வெளிவந்துவிட்டது எனத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார். அதற்கு பார்த்திபன் தனது பாணியில் நக்கல் நய்யாண்டியுடன் பதில் கூறியிருந்தார். அத்துடன் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று இருந்த நிலையில், புதுச்சேரியில் ஒருபடி மேலே போய் ப்ளூ சட்டை மாறன்உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து,கொடும்பாவி கொளுத்தியுள்ளனர்.

புதுச்சேரி- கடலூர் சாலையில் உள்ள ப்ரோவிடண்ட் மால் திரையரங்கில் படம் பார்த்த புதுச்சேரி நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் திரையரங்க வாயிலில் படம் குறித்து மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்குச் செருப்பு மாலை அணிவித்தும் செருப்பால் அடித்தும் அவரது உருவ பொம்மைக்குத் தீயிட்டு கண்டனம் தெரிவித்த செய்தியும், அது சம்பந்தமான வீடியோவும் வெளியாகியுள்ளது .

இது சம்பந்தமாக ப்ளூ சட்டை மாறனிடம் பேசியபோது, “புதியபாதை படத்தில் அன்றைய சூப்பர் ஸ்டார்கள் நடிக்கவில்லை. பார்த்திபன்தான் நாயகனாக நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்குகாரணம் திரைக்கதை தான்.அதுபோலத்தான் இரவின் நிழல் படத்தையும் பார்க்கிறேன். நான் தேடிய கூகுளில் இந்தப்படம் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாகக் காட்டவில்லை. நான் கூறிய கருத்தை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் முதலில் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனக் கூறிய படத்தைப் பார்த்தார்களா எனத் தெரியவில்லை. பார்த்தால் நான் கூறியது உண்மை என்பது புரியும்” என்றார்.

மேலும் அவர், “என்னுடைய கொடும்பாவி எரித்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது. 40 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் போன்று சாமானியனான எனது கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இப்போது வீதியில் இறங்கிப் போராடுவது என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது, கவனப்படுத்தியிருக்கிறது. எனது விமர்சனம், கருத்துக்கள் பொதுவெளியில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. எனது பொறுப்பு கூடியிருக்கிறது” என்றார் .

அதுபோன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செருப்புமாலை போட்டு தரமான செருப்படி சம்பவம் செய்த பார்த்திபன் ரசிகர்கள். புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீக செயல் தொடரட்டும்” என்று விமர்சித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் கொடும்பாவி எரிப்பு சம்பந்தமாகத் திரையரங்க உரிமையாளர்கள் வினியோகஸ்தர்களிடம் கேட்டபோது, “இப்போது வெளிவருகிற படத்தின் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு வாரம். அதற்குள் படம் நன்றாக இருக்கிறது என்கிற கருத்து பொதுவெளியில் உருவாக வேண்டும். இல்லை என்றால் படம் போனியாகது. இதனை புரிந்துகொண்டவர்கள் படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறார்கள். உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதற்காகவே படத்திற்கான வசூல் அதிகரித்துவிடாது. அதிலும் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்தது, அதைப் பற்றி எதிர்மறையான கருத்து கூறியதற்காக இது போன்று போராட்டம் நடத்துவது சரி என கூற முடியாது.

தான் தயாரித்த படம் சூப்பர் என தயாரிப்பாளர் கூறுவது போன்று அந்தப் படத்தை டிக்கெட் எடுத்து தியேட்டரில் படம் பார்க்கின்றவர் விமர்சிப்பதற்கு உரிமை உள்ளது. அதைவிட்டு படத்தை ஓடவைக்கவும், விளம்பரபடுத்தவும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரோ என்கிற கருத்தை உருவாக்கவே பாண்டிச்சேரியில் நடந்த சம்பவங்கள் உதவும்” என்கிறார்கள்.

“பத்தாண்டுகளுக்கு முன்புவரை ப்ளூசட்டை மாறனை எல்லா சினிமாகாரர்களுக்கும் தெரியாது. அப்படி ஒரு நபர் யூடியுபில் சினிமா விமர்சனம் பேசுகிறார் என்பதே தமிழ் சினிமாவில் நடைபெற்ற விழாக்களில் ப்ளூசட்டை மாறனைத் திட்டுவதாக நினைத்துக்கொண்டு அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்தான். அதன் விளைவு சினிமாவை கடந்து அரசியல் கட்சித் தலைவர்களின் அறிக்கைகளுக்கு இணையாக ப்ளூ சட்டை மாறன் கருத்துக்களைத் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் என வெளியிடுகிற சூழலை உருவாக்கியவர்கள் சினிமாகாரர்கள்தான்” என்றனர்.

இராமானுஜம்

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.