மேற்கு ஆசியாவின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான போர் மற்றும் தற்போது நிலவும் தற்காலிக போர் நிறுத்தம் ஆகியவற்றுக்கு இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானின் இறையாண்மைக்காக ரஷ்யா “தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்யும்” என்று புடின் உறுதியளித்துள்ளது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ‘செக்’ மற்றும் ரஷ்யாவின் ஆதரவு
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார முற்றுகையை விலக்கினால் மட்டுமே இந்த ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யா ஈரானின் பக்கம் நிற்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யா நேரடியாகப் போரில் ஈடுபடாவிட்டாலும், அமெரிக்கப் படைகளின் நடமாட்டத்தை ஈரான் துல்லியமாகக் கண்டறியத் தேவையான செயற்கைக்கோள் தரவுகளை (Satellite Intelligence) ரகசியமாக வழங்கி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேரிடைம் செக்யூரிட்டி பெல் 2026: கடலில் ஒரு புதிய சக்தி
அமெரிக்காவின் கடற்படை ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில் ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ‘மேரிடைம் செக்யூரிட்டி பெல் 2026’ (Maritime Security Belt 2026) என்ற கூட்டுப் போர் பயிற்சியை ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலேயே நடத்தி வருகின்றன. இது வெறும் போர் பயிற்சி மட்டுமல்ல, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிடியைத் தளர்த்துவதற்கான ஒரு கூட்டு வியூகம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மூன்று நாடுகளின் கூட்டணி, சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டி எகிறிக்கொண்டிருக்கிறது.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானின் நிபந்தனைகளை ஏற்பதா அல்லது முற்றுகையைத் தீவிரப்படுத்துவதா என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கு முன்னதாக எண்ணெய் விலை அதிகரிப்பது ட்ரம்ப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். ஈரானின் போராட்டத்தை “வீரஞ்செறிந்த போராட்டம்” என்று புடின் புகழ்ந்து பேசியிருப்பது, ரஷ்யா-ஈரான் இடையிலான 20 ஆண்டுகால மூலோபாயக் கூட்டாணி (Strategic Partnership) எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை உலகிற்குப் பறைசாற்றுகிறது. “ஜலசந்திகள் என்பவை உலகின் தமனிகள்; அவை யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. ஆனால் எங்கள் நாட்டின் மீதான முற்றுகை நீங்கும் வரை இந்தப் பாதையில் அமைதி திரும்புவது கடினம்” – ஈரான் தரப்பு அதிகாரிகளின் சமீபத்திய எச்சரிக்கை இதுதான்
