இந்தியாவில் கோடைகாலம் நீண்டதாகவும், வெப்பமாகவும் மாறிவரும் நிலையில், கடும் வெப்பத்தைத் தட்பவெப்பநிலை நிகழ்வாக மட்டும் அல்லாமல், தொழிலாளர் உரிமை, நிர்வாக நெருக்கடி ஆகியவை சார்ந்தும் பார்க்க வேண்டிய நேரம் இது.
நைனா ஷர்மா
2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியின் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டியபோதும் நகரின் கட்டுமானப் பணிகள் தடையின்றித் தொடர்ந்தன. தினசரி கூலித் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், வேறு வழியின்றிச் சுட்டெரிக்கும் வெயிலைச் சகித்துக்கொண்டனர்.
வாழ்வாதாரம் வெயிலைச் சார்ந்திருந்ததால், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) முறைசாராத் தொழிலாளர்களை வெப்பச் செயல் திட்டங்களில் (Heat Action Plans – HAPs) இணைக்குமாறு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது. இது முன்னேற்றமாக இருந்தாலும், ஆழமானதொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. வெப்ப அலைகள் வெறும் வானிலை நெருக்கடி அல்ல; அது ஒரு அரசியல்-பொருளாதார நெருக்கடி.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவில் வெப்ப அலை நாட்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. 2024ஆம் ஆண்டு மிகவும் கடுமையான கோடைகாலங்களில் ஒன்றாகப் பதிவானது. 2025 பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே வெப்ப அலைகள் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) பதிவு செய்தது. இது இந்திய வரலாற்றில் அசாதாரண நிகழ்வு.

இருப்பினும், இத்தகைய அதீதமான காலநிலைகளின் தாக்கம் சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரையும் சமமாகப் பாதிக்கவில்லை. இந்தியாவின் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் முறைசாராத் துறையில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர், கட்டுமானம், விநியோகம், துப்புரவு மற்றும் விற்பனை போன்ற வேலைகளைத் திறந்தவெளிகளில் செய்கிறார்கள். அவர்களுக்குச் சீரான வெப்பநிலை கொண்ட சூழல் அல்லது கட்டாய ஓய்வு இடைவெளிகள் கிடைப்பதில்லை.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) கூற்றுப்படி, 2001க்கும் 2020க்கும் இடையில், கடும் வெப்பம், ஈரப்பதம் காரணமாக இந்தியா ஆண்டுதோறும் தோராயமாக 259 பில்லியன் தொழிலாளர் நேரங்களை இழந்துள்ளது. 2030க்குள், கடும் வெப்பத்தால் இந்தியா தனது மொத்த ஆண்டு வேலை நேரங்களில் கிட்டத்தட்ட 6 சதவீதத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 34 மில்லியனுக்கும் அதிகமான முழுநேர வேலை இழப்புகளாக மாறக்கூடும்.
இந்தப் புள்ளிவிவரங்கள் பொருளாதாரம் சார்ந்தவை மட்டுமல்ல. தலைச்சுற்றல், நீரிழப்பு, குறைவான உற்பத்தித்திறன், நீண்ட கால உடல்நலக் குறைபாடுகள் ஆகியவற்றையும் குறிக்கின்றன. குறிப்பாக, வீட்டு வேலைகளையும் வருமானம் ஈட்டுவதற்காக வேறு வேலைகளையும் செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகம். தொழிலின் தன்மை, பாலினம், புவியியல், நிழல், தண்ணீர், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை இங்கு பலதரப்பட்ட பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன.
சட்ட இடைவெளிகளும் நிர்வாகத் தோல்விகளும்
சான்றுகள் அதிகம் இருந்தபோதிலும், இந்தியாவின் பேரிடர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களில் வெப்பம் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. 2005ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், வெப்ப அலைகள் இன்னும் “அறிவிக்கப்பட்ட பேரிடர்”களாக வகைப்படுத்தப்படவில்லை. இது பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கிடைக்கக்கூடிய நிதி ஒதுக்கீடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களும் மோசமாகப் பொருத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல்கள் சட்டம் (OSHWC) சுற்றுப்புற வெப்பத்தைப் பணியிட ஆபத்தாக அங்கீகரிக்கவில்லை. அது நீரிழப்பு இடைவெளிகள் அல்லது நிழல் ஏற்பாடுகளைக் கட்டாயப்படுத்தவில்லை.

1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம், 1979ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டம் ஆகியவை வெப்ப அழுத்தத்திற்கான குறிப்பிட்ட விதிகளை வழங்குவதில்லை. 2025 ஏப்ரல் மாதத்தில் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஆலோசனை, நீரிழப்பு இடைவெளிகள், நெகிழ்வான வேலை நேரங்கள் ஆகியவற்றை ஊக்குவித்தாலும், இவற்றையெல்லாம் கட்டாயமாக்கவில்லை. இதன் விளைவாக, தொழிலாளர்கள் பாதுகாப்புக்கான உறுதியான உரிமைகள் இல்லாமல், உச்ச வெப்ப காலங்களிலும் தொடர்ந்து உழைக்கிறார்கள்.
குறையுடைய கொள்கையும் அமலாக்கமும்
2025இல் NDMAஇன் ஆலோசனை, பாதிக்கப்படக்கூடிய முறைசாராத் தொழிலாளர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. வெப்பம் தொடர்பான செயல் திட்டங்களில் பெண்களுக்கு ஏற்படும் கூடுதல் பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் பேசுகிறது. இது குறிப்பிடத்தக்க மாற்றம் என்றாலும், பெரும்பாலான இந்திய நகரங்களில் இத்தகைய திட்டங்கள் இல்லை. அப்படியே திட்டம் இருந்தாலும் நிதிப் பற்றாக்குறை காரணமாக அவை சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. 30% வெப்பச் செயல் திட்டங்கள் மட்டுமே நிதியுதவியைக் குறிப்பிடுகின்றன என்று கிளைமேட் பாலிசி இனிஷியேட்டிவ் அமைப்பு தெரிவிக்கிறது.
அகமதாபாத் மட்டுமே இதில் விதிவிலக்கு. 2010இல் ஏற்பட்ட கொடிய வெப்ப அலைக்குப் பிறகு தொடங்கப்பட்ட அதன் வெப்பச் செயல் திட்டம், முன்னெச்சரிக்கை அமைப்புகள், மருத்துவப் பயிற்சி, பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான பகல் நேரத் தங்குமிடங்களைத் திறப்பது ஆகியவற்றின் மூலம் வெப்பம் தொடர்பான இறப்புகளை 60% குறைத்துள்ளது. இருப்பினும், இதைப் பிற இடங்களிலும் அமல்படுத்துவது சீராக நடக்கவில்லை.
நகர்ப்புற ஏற்றத்தாழ்வும் பாதிப்பின் அரசியலும்
நகர்ப்புற ஏழைகள் நமது நகரங்களின் வெப்பமான மூலைகளில் வாழ்கின்றனர். தகரக் கூரையிட்ட வீடுகள், நிழல் இல்லாத விற்பனைப் பகுதிகள், மேடு பள்ளமான கட்டுமான தளங்களில் வாழ்கின்றனர். குளிர்ச்சி என்பது வர்க்கம் சார்ந்த சலுகை. 10 சதவீதத்திற்கும் குறைவான இந்தியக் குடும்பங்களே குளிர்சாதன வசதியைப் பெற்றுள்ளன. நகர்ப்புறத் திட்டமிடலில் காலநிலைத் தாங்குதிறனுக்கான இடம் மிகவும் குறைவு.
ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் திட்டம், காலநிலைப் பிரச்சினையைக் காட்டிலும் டிஜிட்டல் கண்காணிப்புக்கும் அழகுபடுத்தலுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. நிழல் நிரம்பிய பொது உள்கட்டமைப்பை கட்டாயப்படுத்தும் விதிமுறைகள் இல்லாததால், மரங்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. போதுமான நீர் விநியோகம் இல்லாததால் நீரிழப்பு அபாயம் அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, தில்லியில் தேநீர்க் கடையில் பணிபுரியும் பெண் ஒருவர், மாதவிடாய் காலத்தில் வெப்பத்தால் மயக்கமும் நீண்ட நேரம் நிற்க முடியாத சிரமமும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் செங்கல் சூளையில் ஒவ்வொரு 1°C வெப்பநிலை அதிகரிப்பிற்கும் 2% உற்பத்தித்திறன் குறைவது பதிவாகியுள்ளது.
கருணையும் உரிமையும்

காலநிலைத் தழுவல் என்பது கருணையுடன் மேற்கொள்ள வேண்டிய அறச் செயலாக மாறும் அபாயம் உள்ளது. ஐஸ் கட்டிகளை வழங்குவது, தண்ணீர்ப் பந்தல்கள் அமைப்பது, விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்வது ஆகியவை உதவிகரமானவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவை உரிமை அடிப்படையிலான பாதுகாப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. சட்டத் திருத்தங்கள் அவசியம்.
OSHWC சட்டம் வெளிப்படையாக வெப்ப அழுத்தத்தைக் குறிப்பிட வேண்டும். தெரு வியாபாரிகள் சட்டம், நகர்ப்புற வெப்ப மண்டலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் போன்ற வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் நகர்ப்புறச் சூழ்நிலைகளுக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
குளிர்ந்த கூரையிடுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளுடன் இதைச் செய்யலாம். தொழிலாளர் நல வாரியங்கள் வெப்ப-பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்கும், வருமான இழப்பிற்கு எதிராகக் காப்பீடு வழங்குவதற்கும் அதிகாரம் பெற வேண்டும். தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) தொழில் மண்டலங்களில் வெப்ப நோய் சிகிச்சைக்கான பிரிவுகளைச் சேர்க்கலாம்.
வெப்பத்தைத் தாங்கும் திறனுக்கு நிதி திரட்டுதல்
நகராட்சிகள் பெரும்பாலும் நிதிப் பற்றாக்குறையைக் குறிப்பிடுகின்றன. ஆனால் மாநிலப் பேரிடர் நிவாரண நிதி, CAMPA நிதி, ஸ்மார்ட் சிட்டிஸ் பட்ஜெட்டுகள் ஆகியவற்றிலிருந்து இதற்கான நிதியைப் பெற வழிகள் உள்ளன. பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) சார்ந்த நிதி ஒதுக்கீடுகளையும் நகர்ப்புற வெப்பத்தைச் சமாளிப்பதை நோக்கி மடைமாற்றலாம். தேசிய, உலகளாவிய ஆதாரங்களிலிருந்து வரும் காலநிலை நிதிப் பங்கீட்டில், வெப்பத் தாங்குதிறன் உள்கட்டமைப்பு, முறைசாராத் தொழிலாளர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கை
அரசின் கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள் (சட்டப் பிரிவுகள் 39, 41, 42, 47) மனிதாபிமானம் கொண்ட பணிச்சூழலையும் பொது சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டிய அரசின் கடமையை நிலைநிறுத்துகின்றன. வாழ்க்கைக்கான உரிமையைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவு 21ஐ உச்ச நீதிமன்றம், சுகாதாரம், கண்ணியம் உட்பட என விளக்கம் கொடுத்துள்ளது.
கொடிய வெப்பத் தாக்கத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறுவது, இந்த அரசியலமைப்பு உறுதிப்பாடுகளை மீறக்கூடிய செயலாக அமையும். பொதுநல வழக்கு மூலமாகவோ அல்லது “காலநிலை-பாதுகாப்பான வேலைக்கான உரிமை” என அங்கீகரிக்கும் எதிர்காலச் சட்டவியல் மூலமாகவோ நீதிமன்றங்கள் இதில் தலையிட வேண்டியிருக்கலாம்.
இந்தியாவின் வெப்ப அலை நெருக்கடி சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது நீதி, நியாயம் ஆகியவை சார்ந்த நெருக்கடி. தொழிலாளர் உரிமைகள், நகர்ப்புற வடிவமைப்பு, காலநிலை நெருக்கடிகளைத் தாங்கும் திறன் ஆகியவை கொள்கை, சட்டக் கட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும். முறைசாராத் தொழிலாளர்கள் கோடைகாலத்தை அவர்களாகவே சமாளித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. வெப்ப நிர்வாகம், சட்டமாக இயற்றப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, அமல்படுத்தப்பட வேண்டும்.

வெப்பநிலை உயரும்போது, இந்தியாவின் காலநிலை தயார்நிலையின் உண்மையான அளவீடு உலகளாவிய தரவரிசைகளில் இருக்காது. உழைப்பதை நிறுத்த முடியாதவர்களின் வாழ்க்கையையும் உரிமைகளையும் சார்ந்து இருக்கும்.
நைனா ஷர்மா (Naina Sharma), சென்டர் ஆஃப் பாலிசி ரிசர்ச் அண்ட் கவர்னன்ஸ் (CPRG) அமைப்பின் ஆராய்ச்சியாளர்
