ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காக் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி துபாயில் தொடங்கியது.
இதில் லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன் முடிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 29) இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தொடக்க வீரர்களான ஃபர்ஹான் (57) – சமான் (46) ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய சமிம் (14) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இதனால் 84 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி, அடுத்து 58 ரன்கள் சேர்ப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து ஆல்அவுட் அனது.
இந்திய அணி தரப்பில் சுழலில் அசத்திய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், பும்ரா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 147 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் 20 ரன்கள் குவிப்பதற்குள் அபிஷேக் சர்மா (5), சுப்மன் கில் (12) கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1) ஆகியோர் ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
அடுத்து திலக் வர்மா மற்றும் சஞ்சு இருவரும் அணியை மீட்கும் முயற்சியில் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். இந்த ஜோடி 57 ரன்கள் குவித்த நிலையில் சஞ்சு 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக சிவம் துபே களம் கண்ட நிலையில், சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
கடைசி 3 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஹரிஷ் ராஃப் வீசிய அந்த ஓவரில் துபேவின் சூப்பர் சிக்ஸருடன் 13 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பஹீம் அஷ்ரஃப் வீசினார். அதில் பவுண்டரி விரட்டிய துபே, அதே ஓவரின் கடைசி பந்தில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, பதற்றமான சூழ்நிலையில் திலக்குடன் இணைந்தார் ரிங்கு.
முதல் பந்தில் திலக் 2 ரன்களை விரட்ட, இரண்டாவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். அடுத்து ஒரு ரன்னை தட்டி விட, நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.
இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை தட்டிச் சென்றது.
இத்தொடரில் மூன்று முறை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், மூன்று முறையும் இந்திய அணியே வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் இத்தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளில் வென்ற ஒரே அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது.
