முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்டோபர் 30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர் ஜாமின் கேட்டு சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோன்று அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக புழல் சிறையில் இருந்து அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டார்.
போலீஸ் வேனில் அழைத்து வரப்பட்ட அவர் சிரித்தபடி, நீதிமன்றத்துக்குள் சென்றார். குற்றவாளி கூண்டில் அன்பில் மகேஷ் உட்கார வைக்கப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கியது.
அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் ஆதிராகி ‘சிறையில் சரியான உணவு வழங்காததால் 2-4 கிலோ வரை அன்பில் மகேஷின் உடல் எடை குறைந்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து நவம்பர் 2ஆம்ம் தேதி வரை போலீஸ் காவல் கேட்டுள்ளனர்.
ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவரிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16ஆம் தேதி அன்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர்.
செப்டம்பர் 18ஆம் தேதி அன்று அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அனைத்துக்கும் அன்பில் மகேஷ் ஒத்துழைப்பு அளித்தார்” என்று வாதங்களை முன் வைத்தார்.
மேலும் அவர், “பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நடத்தப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் மட்டுமல்ல துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறி, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் என மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை அதிகாரிகளிடம் வழங்க அமைச்சர் உத்தரவிட்டார். அதனையடுத்து பல்வேறு துறைகள் கலந்து ஆலோசித்து 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.
இதைத்தான் தற்போது ஊழல் என்று கூறுகின்றனர்” என்றும் தெரிவித்தார்.
”சோதனைக்கு வந்த போது போலீசாரை யாரும் தடுக்கவில்லை. அன்பில் மகேஷ் எங்கும் தப்பி ஓட மாட்டார். சிறையில் அன்பில் மகேஷுக்கு நீதிமன்றம் கூறிய உணவு கூட வழங்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான். அன்பில் தூங்கும்போது லைட்டை ஆன் செய்து வைத்துள்ளனர். மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப்புக்கு கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.
ஆனால் அன்பில் மகேஷுக்கு மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்திதான் வழங்கப்படுகிறது. வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது அடிப்படை கோரிக்கை” என்று வாதங்களை முன்வைத்தார்.
மேலும், ”அன்பில் மகேஷ் மட்டுமல்ல அவருடைய குடும்பமே நாட்டின் நலனிற்காக சேவை செய்த குடும்பம்.இங்கிருந்து எங்கும் தப்பி செல்ல மாட்டார். ஆதாரங்கள் இல்லாமல் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது” என்றும் அன்பில் மகேஷ் வழக்கறிஞர் கூறினார்.
தொடர்ந்து காவல்துறை சார்பில் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது
