சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் முதல்வர் விஜய் பசும்பொன்னுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் பசும்பொன்னுக்கு செல்லவில்லை. சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன்.
வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்.
சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் விஜய் நிச்சயம் பசும்பொன்னுக்கு வருவார் என்று கூறியுள்ளார்.
