பெண்களை தவெகவிடம் இருந்துதான் முதலில் காப்பாற்ற வேண்டும்.. ‘தாய் மாமா’வாக இருப்பதற்கு முன் முதலமைச்சராக இருங்க விஜய்.. மு.க.ஸ்டாலின் விளாசல்!

Published On:

| By Mathi

DMK-MK Stalin-TVK

தமிழ்நாட்டில் பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம், தவெகவிடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மெத் பூபாலன் போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணம் தவெகவின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நாளை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 30) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று கேட்டுத்தான் நான் பேசுவேன். இப்போது தமிழ்நாடு இருக்கிற நிலையைப் பார்த்து நான் இப்படிக் கேட்டால், ‘என்ன கிண்டல் செய்கிறீர்களா’ என்று நீங்களே என்னைத் திருப்பிக் கேட்பீர்கள்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் – குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை, வரலாறே காணாத விலைவாசி உயர்வு… இவற்றைக் கண்டித்து வருகிற அக்டோபர் 31-ஆம் நாள் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போகிறது. அதை முன்னிட்டு சில கருத்துகளை ‘ஷேர்’ பகிர்ந்து கொள்ளதான் இந்த வீடியோ.

சினிமாவில் ஹீரோவாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்திருக்கிறது.

ADVERTISEMENT

தவெக ஆட்சி அமைவதற்கு முன்னால் அந்தக் கட்சித் தலைவர், இன்றைய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் எல்லாக் கூட்டங்களிலும் என்ன பேசினார்? தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குழந்தைகள் – பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, போதைப்பொருட்களால் குற்றங்கள் நடக்கின்றன… இதை மட்டும்தான் தொடர்ந்து பேசி ஆட்சிக்கு வந்தார்.

இப்படிக் கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேசுகிறவருடைய ஆட்சியில் இன்று என்ன நிலைமை?

பட்டப்பகலில் முக்கிய சாலைகளில் கொடூரக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், வீட்டில் தனியாக வசிக்கிற முதியவர்களைக் கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பது… எல்லாமே சர்வசாதாரணமாக நடக்கின்றன. சிறுமிகள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட இந்த அரசின் மீது பயமில்லை. கிரிமினல்கள் இதை அவர்களுக்கான ஆட்சியாகக் கொண்டாடுகிறார்கள்.

தலைநகரான சென்னையிலேயே மைலாப்பூர், அடையாறு, தரமணி என்று மிக மிக முக்கியமான பகுதிகளிலேயே கொலைகள் நடக்கின்றன. ஜாமீனில் வெளியே வரக்கூடிய குற்றவாளிகள் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வருகிற வழியிலேயே அரிவாளால் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். நீதிமன்ற வளாகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்கள். பல மாவட்டங்களில் இரட்டைக் கொலைகளாக நடக்கின்றன. கொன்றுவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு கொண்டிருக்கிறார்கள்.

புழல் சிறைச்சாலையிலேயே இருந்த கைதிகள் தப்பித்துப் போகிறார்கள். தேனி மாவட்ட சிறைச்சாலையிலிருந்து ஒரே இரவில் 17 பேர் பிரதான வாயிலைத் திறந்து சாவகாசமாகத் தப்பித்திருக்கிறார்கள். நடுரோட்டில் கொலை செய்துவிட்டு எந்தப் பதற்றமும் இல்லாமல் பைக், ஆட்டோவில் ஏறி குற்றவாளிகள் போகிறார்கள்.

இந்தக் காட்சிகளையெல்லாம் முதலமைச்சர் பார்க்கிறாரா இல்லையா என்றுகூட நமக்குத் தெரியவில்லை. இந்த செய்திகள் அவர் காதுக்குப் போகிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் இப்படி எதுவுமே நடக்காத மாதிரிதான் அவருடைய செயல்பாடுகள் இருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் அறிக்கை வெளியிடுகின்றன, கண்டனம் தெரிவிக்கின்றன, போராட்டம் நடத்துகின்றன. ஆனால் முதலமைச்சரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

இன்னும் சினிமா படப்பிடிப்பு நேரத்தில் கேரவனில் போய் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது மாதிரியே யாராலும் அணுக முடியாமல் இருக்கிறார். காவல்துறைக்கு முதலமைச்சர்தானே பொறுப்பு? அவர் பதில் சொல்ல வேண்டுமா இல்லையா? அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமா வேண்டாமா? ஆனால் இது எதுவுமே நடப்பதில்லை. எல்லாத் துறைகளுக்கும் ஒரு சில அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள். அந்தப் பதிலும் பொறுப்பற்ற பதில்களாக இருக்கின்றன.

ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகும் நிலையிலும் எல்லாவற்றுக்கும் ‘திமுக, திமுக’ என்று சொல்வதுதான் இவர்களிடம் இருக்கக்கூடிய ஒரே பதில்.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதிக்குப் பாதி குற்றச் சம்பவங்களில் தவெக கட்சிக்காரர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கேயும் போகத் தேவையில்லை. தன்னுடைய கட்சியில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவு குறையும். அதாவது பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம், தவெகவிடம் இருந்துதான் பெண்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது!

பொதுவாக எல்லாக் கட்சிகளிலும் ஒரு சில களைகள் இருக்கலாம். ஆனால் களைகளெல்லாம் ஒட்டுமொத்தமாக போய்ச் சேர்ந்திருக்கிற கட்சியாக இந்த தவெக இருக்கிறது.

அதிலும் ”மெத்” பூபாலன் என்ற ஒருவர் சில நாட்களுக்கு முன்னால் ஒன்றிய அரசின் DRI அமைப்பிடம் சிக்கியிருக்கிறார். தமிழ்நாட்டைப் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாற்றி உலகம் முழுவதும் ”மெத்” விநியோகம் செய்வதுதான் இவருடைய வேலை. இவர் ஒரு தவெக நிர்வாகி. ஆனால் இந்தச் செய்தியை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று தவெக ஒன்றியச் செயலாளர்- பத்திரிகையாளர்களுக்குத் தொலைபேசியில் மிரட்டுகிறார். இதுதான் தூய சக்தியா?

தவெக நிர்வாகியான ”மெத்” பூபாலன் போதைப்பொருள் உற்பத்தி மூலம் சம்பாதித்த பணம்தானே நாகை மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் தவெகவின் தேர்தல் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும்? அதனால்தான் பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்களா? இதையெல்லாம் முறையாக விசாரிக்க வேண்டாமா?

சட்டம் ஒழுங்கு சீர்கேடு மட்டுமில்லாமல், வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலைவாசியும் உயர்ந்து மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ரேஷன் கடையில் சன்ன ரக அரிசி வழங்குகிறோம் என்று சொல்லி, ரேஷன் அரிசிக்குப் பாலிஷ் போட்டு ஏமாற்றுகிறார்கள். நியாயவிலைக் கடைகளிலேயே மலிவு விலையில் வெங்காயம் விற்பனை என்று ஏமாற்றுகிறார்கள். ஆனால் கடைக்குப் போனால் அங்கே வெங்காயமே இருப்பில் இல்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையே இந்த விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தங்கம் வாங்க முடியுமா என்று ஏழை மக்கள் ஏங்கிய காலம் போய், அரிசியே வாங்க முடியுமா என்று ஏங்குகிறார்கள். திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பணவீக்கம் குறைவாக இருக்கிற மாநிலமாகத் தமிழ்நாட்டை வைத்திருந்தோம். ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு எந்தத் துறையிலும் நிர்வாகத் திறன் இல்லை. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மூடர் கூட்டத்தின் ஆட்சிதான் இன்று தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த TVK Government சொந்த புத்தியும் இல்லாத, சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி கவர்ன்மெண்ட்!

இந்தியாவிலேயே எந்த மாநிலமும் வாங்காத அதிக விலையாக 37 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குகிறார்கள். காரணம், எந்தத் திட்டமிடலும் தொலைநோக்கும் இல்லை. இப்போது அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக என்ன செய்கிறார்கள்? 41 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்போவதாகச் செய்தி வெளியிட்டுவிட்டு யூ-டர்ன் அடித்துவிட்டார்கள்.

ஒரு கோட்டுக்குப் பக்கத்தில் அதைவிடப் பெரிதாக இன்னொரு கோடு போட்டால் தானாகவே அந்தக் கோடு சிறிய கோடாக ஆகிவிடும். அதுமாதிரி 37 ரூபாயைக் குறைவாகக் காட்ட வேண்டும் என்று அந்த 41 ரூபாய் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

மக்களைப் பாதிக்கிற இந்தப் பிரச்சனைகளையெல்லாம் நாம் பேசினால், ஒரு நல்ல அரசு அதை சரிசெய்யப் பார்க்க வேண்டும். ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இவர்களுடைய ஐடி விங்கில் இருக்கிற ஆன்லைன் அப்யூஸர் கூட்டத்தை வைத்து டூல்கிட் ஆக்டிவேஷன் செய்கிறார்கள். எந்தக் கட்சி மக்கள் பிரச்சனையைப் பேசினாலும் அந்தப் பதிவுகளுக்குக் கீழே அவர்களைத் திட்டிக் கமெண்ட்ஸ் போட வைத்தாலே போதும் என்று இருக்கிறார்கள்.

இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி என்று முதலமைச்சர் சொல்கிறாரே, உண்மையிலேயே எந்த இரண்டுக்கு இடையில் போட்டி இருக்கிறது?

மின்வெட்டு – அரிவாள் வெட்டு!

கரண்ட் பில் – மளிகை பில்!

விலை உயர்வு – கொலை உயர்வு!

இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்தம்.

அண்ணனாக இருப்பேன், மாமாவாக இருப்பேன், சித்தப்பா பெரியப்பாவாக இருப்பேன் என்று டயலாக் விட்டாரே… முதலில் அவர் முதலமைச்சராக இருக்கட்டும்!

அவர் வேலையை ஒழுங்காக பார்த்தால் தமிழ்நாடு எப்படி எல்லாத் துறைகளிலும் ரிவர்ஸ் கியரில் போகும்? ஏதாவது ஒரு துறையிலாவது கடந்த திராவிட மாடல் ஆட்சியைவிட தவெக ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறதா? எல்லாவற்றிலும் சரிவு, வீழ்ச்சி, பின்னடைவு. இப்படி நான் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதை எதிர்த்துத்தான் 31-ஆம் நாள் திமுக நடத்துகிற ஆர்ப்பாட்டம் என்பது இந்த அரசுக்கான எச்சரிக்கை மணி. இதை Wake Up Call- ஆகஎடுத்துக்கொண்டு முதலமைச்சர் செயல்பட வேண்டும். மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம், மக்களும் நம்மை நம்பித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஆர்ப்பாட்டம்.

ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்! முதலமைச்சரையும், தூங்கி வழிகிற ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்புகிற அளவுக்கு 31-ஆம் தேதி நம்முடைய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share