சர்க்கரை நோயாளிகளுக்கு சில நேரங்களில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு திடீரெனக் குறைந்து, தலைசுற்றல், நடுக்கம், அதிக வியர்வை, குழப்பம், பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதை ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia) என்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் பதற்றப்படாமல் சரியான முதலுதவி செய்வது மிகவும் முக்கியம்.
70 mg/dL-க்கு கீழே சென்றால் கவனம்
ரத்தச் சர்க்கரை அளவு 70 mg/dL-க்கு கீழே குறைந்தால், உடனடியாக வேகமாக உறிஞ்சப்படும் சர்க்கரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக 15 கிராம் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
15-15 விதி எப்படி செயல்படுகிறது?
15 கிராம் சர்க்கரை எடுத்துக்கொண்ட பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து மீண்டும் ரத்தச் சர்க்கரையை பரிசோதிக்க வேண்டும். அளவு இன்னும் குறைவாக இருந்தால், மீண்டும் 15 கிராம் சர்க்கரை எடுத்துக்கொள்ளலாம்.
அரை கப் பழச்சாறு அல்லது குளுக்கோஸ் மிட்டாய் போன்றவற்றை அவசர நேரத்தில் பயன்படுத்தலாம். நடைப்பயிற்சி அல்லது வெளியே செல்லும்போது இவற்றை கைவசம் வைத்திருப்பது உதவியாக இருக்கும்.
சாக்லேட், பிஸ்கட் சாப்பிடுவது சரியா?
சர்க்கரை குறைந்தவுடன் பலரும் சாக்லேட் அல்லது பிஸ்கட்டை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அவற்றில் உள்ள கொழுப்பு மற்றும் புரதம் சர்க்கரை உடலில் உறிஞ்சப்படும் வேகத்தை குறைக்கலாம். எனவே, அந்த நேரத்தில் வேகமாக உறிஞ்சப்படும் சர்க்கரைதான் முக்கியம்.
மயக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது?
சர்க்கரை நோயாளி மயக்கமடைந்திருந்தால், அவரது வாயில் சர்க்கரை, தண்ணீர் அல்லது உணவை வலுக்கட்டாயமாகக் கொடுக்கக் கூடாது. அது மூச்சுக்குழாயில் சென்று ஆபத்தை ஏற்படுத்தலாம். உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.
இந்த முதலுதவி முறைகளை சர்க்கரை நோயாளிகளுடன் இருப்பவர்களும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
