இந்த வாரம் மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், கச்சா எண்ணெய் (Crude Oil) விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை உள்நாட்டு பங்குச் சந்தையின் போக்கை தீர்மானிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய ராணுவ நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் மற்றும் தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றம் ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர்கள் எதில் கவனம் செலுத்துவார்கள்?
ரெலிகேர் ப்ரோக்கிங் லிமிடெட் (Religare Broking Ltd) நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா கூறுகையில், முதலீட்டாளர்கள் தொழில்துறை உற்பத்தி (IIP) தரவு, HSBC-யின் இறுதி உற்பத்தி, சேவை மற்றும் ஒட்டுமொத்த PMI குறியீடுகள் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்புத் தரவு ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனிப்பார்கள் என்று தெரிவித்தார். இத்தரவுகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் நிலை குறித்த முக்கிய குறிப்புகளை வழங்கும் என்கிறார்.
சந்தையை பாதிக்கும் காரணிகள்
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் நடைபெறும் புவிசார் அரசியல் நிகழ்வுகள் ஆகியவை சந்தை மனநிலையை பாதிக்கும் முக்கிய காரணிகளாகத் தொடரும் என்றும் அவர் கூறினார். இவை தவிர, ஜூலை 1ஆம் தேதி வெளியாகவுள்ள பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் மாதந்திர விற்பனைத் தரவுகளையும் முதலீட்டாளர்கள் கவனிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியல் நிகழ்வுகள்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘என்ரிச் மணி’ (Enrich Money)-யின் தலைமை நிர்வாக அதிகாரி பொன்முடி ஆர். கூறுகையில், இந்த வாரத்தில் சந்தையின் நகர்வுகள் பெரும்பாலும் மேற்கு ஆசியாவின் புவிசார் அரசியல் நிகழ்வுகளைச் சார்ந்தே இருக்கும் என்று தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான சமீபத்திய ராணுவ பதட்டங்களைத் தொடர்ந்து, மேற்கு ஆசியாவில் நிலவும் சூழலை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
சந்தை சரிவை சந்திக்கும்
இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது பதட்டம் தணிந்தாலோ, அது சந்தையில் முதலீட்டாளர்களின் இடர்-ஏற்கும் (risk-taking) மனநிலையை வலுப்படுத்தக்கூடும் என்று அவர் கூறினார். இருப்பினும், பதட்டம் மேலும் அதிகரித்தால், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி சந்தை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரிக்கலாம்.
