குங்குமப்பூவுக்கு சந்தையில் எப்போதுமே நல்ல விலை இருக்கிறது. அதனால் அதன் பெயரில் போலிப் பொருட்களும் விற்பனைக்கு வருவது உண்டு.
நிறம், மணம் மட்டுமே பார்த்து வாங்காமல், வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் குங்குமப்பூவின் தரத்தை ஓரளவுக்கு அறிந்து கொள்ளலாம்.
தண்ணீரில் போட்டால் நிறம் எப்படி மாறும்?
அசல் குங்குமப்பூவை வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் போட்டால், நிறம் உடனடியாக வெளியேறாது. சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறம் வெளிப்படும்.
ஆனால் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட போலி குங்குமப்பூவை தண்ணீரில் போட்டவுடன் அடர் சிவப்பு நிறம் வேகமாகப் பரவக்கூடும். ஊறிய பிறகு இழையின் நிறமும் மங்கிவிடும்.
வாசனை மற்றும் தோற்றத்தையும் கவனிங்க
நல்ல தரமான குங்குமப்பூவில் தேன் மற்றும் காய்ந்த வைக்கோல் போன்ற தனித்துவமான மணம் இருக்கும். லேசான கசப்புச் சுவையும் காணப்படும். ரசாயன வாசனை அல்லது செயற்கையான இனிப்புச் சுவை இருந்தால் கவனம் தேவை.
அசல் குங்குமப்பூ இழையின் ஒரு முனை மெலிதாகவும், மறுமுனை சிறிது விரிந்த புனல் வடிவிலும் இருக்கும். ஒரே மாதிரியான அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இழைகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கலாம்.
விரலில் தேய்த்து பார்க்கலாம்
ஊறவைத்த குங்குமப்பூ இழையை விரல்களுக்கு இடையில் மெதுவாகத் தேய்க்கலாம். அசல் இழை எளிதில் துண்டாகாமல் இருக்கும். அதே நேரத்தில் விரல்களில் மஞ்சள்-ஆரஞ்சு நிறம் படியும்.
போலி இழைகள் தேய்க்கும்போது உடைந்து பிசுபிசுப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது.
வாங்கும்போது இந்த விஷயத்தை மறக்காதீங்க!
குங்குமப்பூ வாங்கும்போது மிகக் குறைந்த விலை என்பதற்காக உடனடியாக தேர்வு செய்யாமல், பேக்கேஜிங் மற்றும் தரச் சான்றுகளைப் பார்க்க வேண்டும். குறிப்பாக ISO 3632 தரம் மற்றும் காஷ்மீர் குங்குமப்பூவுக்கான GI Tag போன்ற விவரங்கள் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது உதவியாக இருக்கும்.
