டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாறிய பின்னரும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து வருகிறது.
இதனால் கடை ஊழியர்களுக்கும் மது பிரியர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது.
இந்தநிலையில் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதை தடுக்க ‘என்டு டூ என்டு’ செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் தற்போது டாஸ்மாக் இணையதளம் மூலம் மதுபாட்டில்களை புக் செய்யும் முறையை அறிமுகப்படுத்தி அதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
இதில், மது பிரியர்கள் இருக்கும் பகுதிகளில் எங்கெங்கு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன, அதில் என்ன வகையான மது பாட்டில்கள் இருக்கின்றன, அவற்றின் விலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும்.
இதன் மூலம் மது பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மது பாட்டிலை தேர்வு செய்து ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடலாம்.
பணம் செலுத்திய பிறகு, மது பிரியர்களின் செல்போனுக்கு ஒரு கியூ ஆர் கோடு அனுப்பி வைக்கப்படும்.
அதை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் காட்டினால், அவற்றை ஸ்கேன் செய்து நாம் ஆன்லைன் மூலம் தேர்வு செய்த மது பாட்டில்களை வழங்குவார்கள்.
இதனால் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு டாஸ்மாக் சூப்பர்வைசர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
