கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லத் தடை: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Published On:

| By Kavi

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கருங்கற்கள் உள்ளிட்ட கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து ஜல்லி, கருங்கற்கள், எம் சாண்ட் ஆகியவற்றை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக குமரி மாவட்டம் விளவங்கோட்டை சேர்ந்த லிபின் பொன்னுசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில், “முறையாக அரசிடம் அனுமதி பெற்ற குவாரிகளிலிருந்து எடுக்கப்பட்ட மணலை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இதுபோன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்தது” என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அரசு சார்பில், கனிம வளங்கள் எடுப்பதை முறைப்படுத்தும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், “முறைப்படுத்தும் நோக்கத்துக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர்கள் கனிமங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்து செல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு விதிக்கு உட்பட்டுதான் குவாரி செயல்படுவது என்பது எப்படி தெரியும்.

இந்த வழக்கு தொடர்பாக அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share