பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம்… உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்! 

Published On:

| By Kavi

தமிழகத்தில் உரிய கொள்கை முடிவு எடுக்கப்படும் வரை பைக் டாக்ஸிகளை இயக்குவதற்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஓலா, ராப்பிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் ஆட்டோ, கார் டாக்ஸிகள் இயங்குவது போல பைக் டாக்ஸியும் இயக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நவீன் குமார், ”பைக் டாக்ஸிகளுக்கான கட்டுப்பாடு விதிகளை தமிழக அரசு உருவாக்க உத்தரவிட வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், “ஓலா, ராப்பிடோ, ஊபர் உள்ளிட்ட செயலிகள் மூலம் பைக் டாக்ஸிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

இது வேலை தேடுபவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பகுதிநேர வாழ்வாதாரமாக உள்ளது.. பயணிகளும் குறைந்த கட்டணத்தில் சேவை பெறுகின்றனர். 

ஆனால் இதற்கென தெளிவான விதிகள் வகுக்கப்படாததால் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பைக் ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். பைக் டாக்ஸி நிறுவனங்களை கட்டுப்படுத்தாமல் ஓட்டுநர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவது நியாயமற்றது.

ADVERTISEMENT

எனவே மத்திய அரசின் மோட்டார் வாகன திருத்தச் சட்ட வழிகாட்டுதலின்படி தமிழக அரசு பைக் டாக்ஸிகளுக்கான கட்டுப்பாடு விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு சார்பில், “பைக் டாக்ஸிகளை முறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து துறை, நிதித்துறை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர ஆணையம் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பைக் டாக்ஸி இயக்கப்படும் விவகாரத்தில் அரசு விரிவான கொள்கை முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே இந்த முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை. விதியை மீறி யாரேனும் பைக் டாக்ஸி இயக்கினால் அபராதம் விதிக்கப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது. 

அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், “அனுமதி இல்லாத பைக் டாக்ஸிகளில் பொதுமக்கள் பயணிப்பதை தவிர்க்க இது குறித்து ஏன் முன்கூட்டியே விழிப்புணர்வு விளம்பரம் செய்யக்கூடாது” என்று கேள்வி எழுப்பினர். 

ஒருவேளை பைக் டாக்ஸியில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து தாமதிக்காமல் விரைவாக கொள்கை முடிவெடுக்க அரசுக்கு அறிவுறுத்தினர். 

இதுகுறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share