காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
கடந்த ஜூன் 28ஆம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3500 கன அடி வீதம் தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. எனினும் இதை கர்நாடகம் மறுத்து விட்டது.
ஜூலை 24ஆம் தேதி மீண்டும் இக்கூட்டம் கூடிய போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த அளவில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு மீண்டும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகா அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த சூழலில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டி கே சிவக்குமாரை சந்தித்து பேசுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வர வேண்டாம் என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துவிட்டார்.
காவிரி நீரை கர்நாடகா திறந்து விடாததால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டமும் களை இழந்துள்ளது.
காவிரி பிரச்சனையில் முதல்வர் விஜய் அரசின் செயல்பாடுகளை கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “28.07.2026 அன்று நடைபெற்ற 139-வது கூட்டத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு காவிரி படுகையின் நீரியல்-வானிலை சூழலை ஆய்வு செய்து, 29.07.2026 (காலை 8.00 மணி) முதல் அடுத்த 15 நாட்களுக்கு (29.07.2026 முதல் 12.08.2026 வரை) பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3500 கன அடி (cusecs) வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
30.07.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (அவசர) கூட்டத்திலும் காவிரி படுகையின் நீரியல்-வானிலை நிலவரம் ஆய்வு செய்யப்பட்டு, குழுவின் முடிவு உறுதி செய்யப்பட்டது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்குப் பிறகு, பில்லிகுண்டுலுவில் 29.07.2026 முதல் 02.08.2026 வரை வரப்பெற்ற நீரின் அளவு வினாடிக்கு 158 முதல் 550 கனஅடி மட்டுமே.
3 ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்-அணையில் 23.078 டி.எம்.சி. கபினியில் 18.610 டி.எம்.சி. ஹாரங்கியில் 7.827 டி.எம்.சி மற்றும் ஹேமாவதியில் 28.022 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி மொத்த நீர் இருப்பு (பயன்பாட்டு நீர் இருப்பு 67.517 டி.எம்.சி) உள்ளது.
எனவே விகிதாச்சார அடிப்படையில் பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தனது அணைகளில் இருந்து திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.
இதற்கிடையே. கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பில்லிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவு 26.954 டி.எம்.சி ஆகும். இது, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவான 4.536 டி.எம்.சி மிகக் குறைவாகும்.
இச்சூழலில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு அளிக்க தவறியதாலும் தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்க வேண்டிய நீர் 26.954 டி.எம்.சி என்பதாலும், மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (03.08.2026) உச்ச நீதிமன்றத்தினை அணுகி தக்க உத்தரவைப் பெற அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை குறித்த காலத்தில் பெறவும் உச்சநீதிமன்றத்தில் இன்று (03.08.2026) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
