தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள் தொடர்பாக முதல்வர் விஜய் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படும் அதிகாரியின் முந்தைய 5 ஆண்டுகாலப் பணிப் பதிவுகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் முழுமையாகச் சரிபார்க்கப்படும்.
கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ அல்லது தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்தாலோ தகுதிப் பட்டியலில் பெயர் சேர்ப்பது ஒத்தி வைக்கப்படும்.
ஆரம்ப கட்ட விசாரணைகள் அல்லது சாதாரண குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பது தகுதிப் பட்டியலில் சேர்ப்பதற்குத் தடையாகாது
சில தவிர்க்க முடியாத சூழல்களில், பொது விதி 39-இன் கீழ் தற்காலிகப் பதவி உயர்வுகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பதவி உயர்வுக்கான பட்டியலைத் தயாரிக்கும் போது தகுதி மற்றும் பணி மூப்புநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி பட்டியல் உருவாக்கப்படும்
காலிப்பணியிடங்கள் ஏற்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அதற்கான மதிப்பீடுகளை அரசுக்கு அனுப்ப வேண்டும். இதனால் நிர்வாகத் தாமதங்கள் முற்றிலும் தவிர்க்கப்படும்.
தகுதியான அதிகாரிகள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே அவர்களுக்குரிய பதவி உயர்வு ஆணை கிடைப்பதை துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தகுதிப் பட்டியல் தயாரிப்பில் உள்ள குளறுபடிகள் களையப்பட்டு, ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் விரைவான பதவி உயர்வுகள் வழங்க வேண்டும்.
அதிகாரிகளின் பதவி உயர்வு கோப்புகள் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மனித வள மேம்பாட்டு துறையின் ஒப்புதல் பெற்ற பிறகு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இனிவரும் காலத்தில் பதவி உயர்வு கோப்புக்கள் தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வர் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு அனுப்ப வேண்டிய கோப்புகள்
துறைத் தலைவர்கள் மற்றும் அதற்கு நிலை கீழே உள்ள அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கான பதவி உயர்வு அல்லது உயர் பதவிக்கான நியமனங்கள் தொடர்பான கோப்புகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
- தலைமை வழக்கறிஞர்
- கூடுதல் தலைமை வழக்கறிஞர்
- அரசு வழக்கறிஞர்
- நியமனங்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
மாநிலப் பணி அதிகாரிகளின் பதவி உயர்வு கோப்புகள், தலைமைச் செயலாளர், செயலாளர் (மனித வள மேலாண்மைத் துறை) மற்றும் தொடர்புடைய நிர்வாகத் துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையுடன், சம்மந்தப்பட்ட அமைச்சர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
- அரசு செயலாளர்கள்
- துறைத் தலைவர்கள்
- அகில இந்திய சேவை அதிகாரிகள்(IAS)
- அரசு கூடுதல் செயலாளர்கள்
- மாவட்ட வருவாய் அலுவலர்கள்
- காவல் கண்காணிப்பாளர்கள்
- கூடுதல் பதிவாளர்கள்
- கூடுதல் இயக்குநர்கள் தொடர்பான கோப்புகள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
சட்டமன்றப் பேரவை நியமனங்கள் தொடர்பான அனைத்துக் கோப்புகளும் சபாநாயகர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
அரசுத் துறைக்கு நிலம் மாற்றுதல் தொடர்பான ஆவணங்களுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அந்த கோப்பு முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
அமைச்சர்களின் ஒப்புதல்
மற்ற அனைத்து மாநிலப் பணி அதிகாரிகளின் பதவி உயர்வு அல்லது உயர் பதவிக்கான நியமனங்கள் தொடர்பான தற்காலிக மற்றும் வழக்கமான குழு ஒப்புதல்களுக்கு, கருத்து வேறுபாடு இல்லையென்றால் சம்மந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலைப் பெறலாம். நிர்வாகத் துறைக்கும், மனித வள மேலாண்மை மற்றும் நிதித் துறைகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தால், அத்தகைய கோப்புகள் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சருக்கு அனுப்பப்படலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், துறைத் தலைவர்கள் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகள் அல்லாத மற்ற அதிகாரிகள் தொடர்பான குழு ஒப்புதல் கோப்புகள், சமூக நல மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சரால் ஒப்புதல் தரப்படும்
நீதிமன்ற நியமனங்கள்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் மற்ற அனைத்து சட்ட அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக சட்ட அமைச்சரிடமிருந்து உத்தரவுகள் பெறப்பட வேண்டும்.
நீர்வளத்துறையில் செயற்பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களின் இடமாற்றம் மற்றும் பணி அமர்வுக்கான முன்மொழிவுகள் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரால் ஒப்புதல் தரப்படும்
பொதுப்பணித்துறையில் செயற்பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களின் இடமாற்றம் மற்றும் பணி அமர்வுக்கான முன்மொழிவுகள் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் ஒப்புதல் தரப்படும்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில், துறைத் தலைவர்கள் மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகள் அல்லாதவர்கள் தொடர்பான பணி அமர்வு, இடமாற்றம் மற்றும் பணி மாறுதல் கோப்புகள் சமூக நல மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சரால் ஒப்புதல் தரப்படும்
நிலம் கையகப்படுத்துதல்
1 ஹெக்டேருக்கு குறைவான நிலம் கையகப்படுத்தப்படும் திட்டங்களுக்கு, சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரிடம் கோப்பு அனுப்பப்பட வேண்டும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு நிலத்தை மாற்றுவதற்கான பரிந்துரைகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரிடமிருந்து உத்தரவுகள் பெறப்பட்டால் போதுமானது.
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நிலத்தை மாற்றுவதற்கான பரிந்துரைகள் தலைமைச் செயலாளர் மூலமாக சம்மந்தப்பட்ட அமைச்சர் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
நீர்நிலைகள் அல்லாத புறம்போக்கு நிலங்களை அரசு கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்த, சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் ஆணை பெற்று, வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வரை சுற்றறிக்கை மூலம் அனுமதி பெறப்பட வேண்டும். துறை அமைச்சருக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ள வழக்குகளில் மட்டும் அந்த கோப்பு முதலமைச்சருக்கு அனுப்பப்பட வேண்டும்.
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனிக்கும் வரை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்குச் சொந்தமான 1 ஹெக்டேருக்கும் அதிகமான நிலம் எனில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மூலமாக முதலமைச்சரிடம் உத்தரவுகள் பெறப்பட வேண்டும். மற்றபடி, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் மூலமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரிடம் உத்தரவுகள் பெறப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கான தடையில்லா சான்று வழங்கும் அதிகாரம் சமூக நல மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை மாற்றுதல்
முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துறைகளில் இருந்து பெறப்படும் வாகனங்களை முன்கூட்டியே கழிவு நீக்கம் செய்வது தொடர்பான கோப்புகளைத் தலைமைச் செயலாளர் ஒப்புதல் அளிப்பார்.
ஆளுநர் ஒப்புதல்
- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்
- மாநில தகவல் ஆணையம்
- தமிழ்நாடு லோக் ஆயுக்தா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒம்புட்ஸ்மேன் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
ஆளுநருக்கு அனுப்பத் தேவையில்லாதவை
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் நியமனங்களை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியது இல்லை. இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
