வீக்கெண்ட் வந்துட்டாலே போதும்… முகத்தை அழகாக்க ஒரு ஜில்லென்ற ஷீட் மாஸ்க்கை (Sheet Mask) முகத்தில் ஒட்டிவிட்டு, அப்படியே சோஃபாவில் சாய்ந்து டிவி பார்ப்பதோ அல்லது போன் நோண்டுவதோ நம்மில் பலரது ஃபேவரட் பொழுதுபோக்கு. இன்னும் சிலரோ ஒருபடி மேலே போய், “அந்த மாஸ்க்கில் இருக்கும் எசென்ஸ் (Essence) முழுமையாக முகத்துக்குள் இறங்கட்டும்” என்று அப்படியே மாஸ்க்கோடு தூங்கி நள்ளிரவிலோ அல்லது மறுநாள் காலையிலோ கழற்றுவார்கள்.
நீங்கள் நினைப்பது போல, ஷீட் மாஸ்க்கை அதிக நேரம் முகத்தில் வைத்திருந்தால் முகம் பளபளக்காது; மாறாக, அது உங்கள் முகத்தில் இருக்கும் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்து வறண்ட பாலைவனமாக மாற்றிவிடும்! இந்த விசித்திரமான தவறுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன, அதனைச் சரியாகப் பயன்படுத்தும் முறை என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்!
அதிக நேரம் வைத்தால் ஏன் முகம் வறண்டு போகிறது? (The Science of Reverse Osmosis)
ஷீட் மாஸ்க்குகள் என்பவை சீரம் அல்லது எசென்ஸில் முழுமையாக நனைக்கப்பட்ட ஒரு துணி அல்லது ஹைட்ரோஜெல் அடுக்கு ஆகும். இதனை முகத்தில் வைக்கும்போது, காற்றில் எசென்ஸ் ஆவியாகாமல் தடுத்து, சருமத்திற்குள் ஈரப்பதத்தை அள்ளித் தரும்.
ஆனால், அதற்கு என்று ஒரு குறிப்பிட்ட கால நேரம் இருக்கிறது. அந்த மாஸ்க் மெதுவாகக் காயத் தொடங்கி, உங்களது சருமத்தை விட மாஸ்க் அதிக வறட்சியாக மாறும்போது, அங்கே ‘எதிர் சவ்வூடுபரவல்‘ (Reverse Osmosis) என்ற நிகழ்வு நடக்கும். அதாவது, ஒரு ஸ்பாஞ்ச் தண்ணீரை உறிஞ்சுவது போல, காய்ந்த மாஸ்க் துணியானது உங்கள் சருமத்தின் ஆழத்தில் இருக்கும் தண்ணீரைத் தலைகீழாகத் தன்பால் உறிஞ்சத் தொடங்கிவிடும்! இதனால் முகம் சாஃப்ட்டாக மாறுவதற்குப் பதிலாக, வழக்கத்தை விட இரு மடங்கு அதிகமாக வறண்டு, சுருக்கங்கள் விழ ஆரம்பித்துவிடும்.
ஷீட் மாஸ்க் பயன்படுத்தும் சரியான 4 முறைகள்
1: 15 நிமிட விதி (The 15-Minute Rule) எந்த ஒரு பிராண்ட் ஷீட் மாஸ்க்காக இருந்தாலும் அதனை உங்களது முகத்தில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்கவே கூடாது. பாக்கெட்டின் பின்னால் போட்டுள்ள நேரத்தைக் கட்டாயம் கவனியுங்கள். அலாரம் வைத்துப் பயன்படுத்துவது இன்னும் நல்லது!
2: ஈரப்பதம் இருக்கும்போதே கழற்றுங்கள் (Remove While Damp) நீங்கள் முகத்திலிருந்து மாஸ்க்கைப் பிரித்தெடுக்கும் போது, அந்த மாஸ்க் துணி இன்னும் லேசான ஈரப்பதத்தோடு (Damp) இருக்க வேண்டும். அது முற்றிலும் காய்ந்து பேப்பர் போல மாறும் வரை காத்திருக்கக் கூடாது.
3: முகத்தைக் கழுவக் கூடாது (Do NOT Wash Your Face) மாஸ்க்கைக் கழற்றியவுடன் முகத்தை சோப்போ அல்லது தண்ணிரோ போட்டுப் பூசி மெழுகக் கூடாது. முகத்தின் மேல் மீதமிருக்கும் எசென்ஸை, உங்களது விரல் நுனிகளால் லேசாகத் தட்டி (Patting motion) சருமத்திற்குள் உறிஞ்சச் செய்ய வேண்டும்.
4: மாய்ஸ்சரைசர் கொண்டு பூட்டு போடுதல் (The Golden Lock) எசென்ஸ் முகத்தில் காய்ந்த 1 நிமிடத்திற்குள், உங்களது வழக்கமான மாய்ஸ்சரைசரைத் (Moisturizer) தாராளமாக அப்ளை செய்ய வேண்டும். இது மாஸ்க் கொடுத்த ஈரப்பதத்தை ஆவியாக விடாமல் சருமத்திற்குள் பூட்டி வைக்கும் ஒரு பாதுகாப்பு அடுக்கு (Seal) போல வேலை செய்யும்.
பியூட்டி எக்ஸ்பர்ட்டின் ரகசிய டிப்ஸ் (Pro-Tips):
- மாஸ்க்கோடு தூங்கவே கூடாது: இரவு நேர ஸ்கின்கேரில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தினால், தூங்குவதற்கு முன்பே கழற்றிவிட வேண்டும். மாஸ்க்கோடு தூங்குவது ஸ்கின்கேரில் செய்யக்கூடிய மிகப்பெரிய ஆபத்தான தவறாகும்.
- மீதமுள்ள எசென்ஸை வீணாக்காதீங்க: மாஸ்க்கை எடுத்த பிறகு பாக்கெட்டின் உள்ளே தாராளமாக எசென்ஸ் மீதம் இருக்கும். அதனை உங்களது கழுத்து, கைகள், முழங்கால்கள் மற்றும் பாதங்களுக்கு அப்ளை செய்து மசாஜ் செய்யலாம்.
