புதுச்சேரியில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயம் கற்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் சர்ச்சையாகி உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ஆகிய 5 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தனியான பாடத் திட்டம் எதுவும் இல்லை. இதனால்
புதுச்சேரி, காரைக்காலில் – தமிழ்நாடு பாடத் திட்டம்
மாகியில்- கேரளா பாடத் திட்டம்
ஏனாமில்- ஆந்திரா பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் 2024-25 கல்வி ஆண்டு முதல் புதுச்சேரி, மாகி, ஏனாம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் அதாவது ஒட்டுமொத்தமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டம் மட்டுமே அமலுக்கு வந்தது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழ் முதல் மொழி
மாகியில் மலையாளம் முதல் மொழி
ஏனாமில் தெலுங்கு முதல் மொழி.
இத்துடன் வெளிநாட்டு மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியவையும் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, 2026-27 ஆம் கல்வி ஆண்டு முதல் 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில்
- குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்
- மேலும் 3-வது மொழியாக வெளிநாட்டு மொழி ஒன்றை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
இது தொடர்பாக அனைத்து பள்ளிகளும் 7 நாட்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் சிபிஎஸ்இ உத்தரவு.
மத்திய அரசின் இந்த உத்தரவால்
- முதலாவது இந்திய மொழியாக தமிழ் இடம் பெறும்; 2-வது இந்திய மொழியாக இந்தியே அனைத்து பிரதேசங்களிலும் இருக்குமா? அல்லது தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகள் 2-வது மொழியாக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
- பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் 2-வது இந்திய மொழியாக இந்தி மொழியே கற்பிக்கப்படும் அபாயமும் உள்ளது.
- அடுத்ததாக வெளிநாட்டு மொழிகளில் ஆங்கிலம் மட்டும் கற்பிக்கப்பட்டு பிரெஞ்சு மொழி கற்பித்தல் கைவிடப்படும் நிலைமை உருவாகும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமான பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை பெற்ற பகுதி. புதுச்சேரிக்கும் பிரான்ஸுக்குமான உறவு இன்னமும் நீடிக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிரெஞ்சு மொழி இன்னமும் முக்கிய பங்கு வகிக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான பிரெஞ்சு மொழி ஆசிரியர்களும் உள்ளனர்.
தற்போது மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையால் பிரெஞ்சு மொழி கைவிடப்படும் நிலை உருவாகி இருப்பது பிரெஞ்சு மொழி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது என்கிற அச்சம் எழுந்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது புதுச்சேரியில் முழுமையான இந்தி திணிப்பு மற்றும் பிரெஞ்சு மொழி நீக்கத்துக்கு வழிவகுக்கிறது என்பதால் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பி உள்ளன.
