இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மையில் ஒரு சிறிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் (unemployment rate) பிப்ரவரியில் 4.9 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நகர்ப்புறங்களில் நிலவும் அதிக வேலையின்மை விகிதமே ஆகும்.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) மக்களின் செயல்பாட்டுப் பங்கேற்பு, வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை நிலை குறித்த தரவுகளின் முதன்மை ஆதாரமாக உள்ளது.
நகர்ப்புற வேலையின்மை விகிதம்:
இந்தியாவில் நகர்ப்புற வேலையின்மை விகிதம் பிப்ரவரியில் 6.6 சதவீதத்திலிருந்து மார்ச் மாதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கிராமப்புறப் பெண்களிடையே வேலையின்மை விகிதம் மார்ச் மாதம் ஏறக்குறைய நிலையாக இருந்தது. அதே சமயம், அதே வயதுப் பிரிவில் உள்ள ஆண்களிடையே வேலையின்மை விகிதம், பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் மார்ச் மாதம் சற்றே அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் பெண்களின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதம் நிலையாக இருந்தது.
நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதம்:
நகர்ப்புற தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) ஒரு நிலைபெறும் போக்கு காணப்படுகிறது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம், பிப்ரவரி மாதம் இருந்த 55.9 சதவீதத்தை விட சற்றே குறைவாக, மார்ச் மாதம் 55.4 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டது.
கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம், பிப்ரவரி மாதம் 58.7 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதம் 58 சதவீதமாக இருந்தது. நகர்ப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஏறக்குறைய நிலையாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 34.4 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதம் 35.3 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) மார்ச் மாதம் 38.9 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 25.2 சதவீதமாக இருந்தது.
தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம்:
கடந்த மாதம் நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR) நிலையாக இருந்தது. கடந்த மாதம் ஒட்டுமொத்த WPR விகிதம் 52.6 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், மார்ச் மாதம் WPR விகிதம் 55.5 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதம் 56.3 சதவீதமாக இருந்தது. நகர்ப்புறங்களில், மார்ச் மாதம் WPR விகிதம் 46.8 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதம் 47 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
