கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் வெடித்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடி தலைமையிலான அரசுக்குத் தொடர்பில்லை என நானாவதி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த மத கலவரம் தொடர்பாக விசாரித்த நானாவதி மற்றும் அக்சய் மேத்தா ஆணையம் 3000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை குஜராத் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது.
2002ஆம் ஆண்டு கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதுபற்றி விசாரிக்க 2002ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் மோடியால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குஜராத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்திற்கு அப்போதைய முதல்வர் மோடியும், அமைச்சர்கள் சிலரும் வன்முறையைத் தூண்டிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. தானாகவே பரவிய கலவரம் எனவும் கூறியுள்ளது.
இக்கலவரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்.பி. ஸ்ரீ குமார் மற்றும் ராகுல் சர்மா மீது சந்தேகம் இருப்பதாகவும்,மேலும் கலவரத்தைப் பரப்பியதாகச் சொல்லப்படும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டையும் விசாரிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் அலட்சியத்துடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நானாவதி மற்றும் அக்சய் மேத்தா விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
