தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது எதிர்பாராத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஜனவரி மாத உச்சமான 5,595 டாலரில் இருந்து தங்கம் சுமார் 26 சதவிகிதம் குறைந்து தற்போது 4,136 டாலர் அளவில் வர்த்தகமாகிறது.
இந்திய சந்தையிலும் MCX தங்கத்தின் விலை ரூ.1.50 லட்சத்துக்கு கீழ் வந்துள்ளது.
தீபாவளி மற்றும் தசரா நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களையும் முதலீட்டாளர்களையும் கவனிக்க வைத்துள்ளது.
தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன?
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கரன்சியான டாலரின் வலிமை மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆகஸ்ட் மாத இறுதியில் 4,700 டாலர் வரை மீண்ட தங்கம், அதன் பின்னர் மீண்டும் சரிவை சந்தித்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் விலை குறைந்தது.
தங்கத்தின் மதிப்பு இனி குறையுமா?
சரிவு ஏற்பட்டாலும் தங்கத்தின் நீண்டகால தேவையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை இருப்பாக வாங்கி வருவதும், புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும் தங்கத்துக்கு ஆதரவாக உள்ளன.
எனவே, தற்போதைய சரிவை முழுமையான வீழ்ச்சியாக பார்க்காமல், சந்தையின் மறுமதிப்பீட்டு கட்டமாக சில நிபுணர்கள் பார்க்கின்றனர்.
தீபாவளிக்கு தங்கம் வாங்கலாமா?
தீபாவளிக்காக நகை வாங்க வேண்டியவர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப வாங்கலாம். ஆனால் முதலீட்டுக்காக ஒரே முறையில் பெரிய தொகையை தங்கத்தில் செலுத்த வேண்டாம் என்பதே நிபுணர்களின் முக்கிய அறிவுரை.
அடுத்த சில வாரங்களில் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக முதலீட்டை பிரித்து செய்வது நல்ல அணுகுமுறையாக இருக்கலாம். மேலும், நகைக்கான செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற செலவுகளைத் தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் Gold ETF-களையும் பரிசீலிக்கலாம்.
தங்கத்தின் விலை மேலும் ஏற்ற இறக்கத்தை சந்திக்க வாய்ப்புள்ளதால், அவசரமாக தேவையான பணத்தை முதலீடு செய்வதை தவிர்ப்பது முக்கியம்.
