4 ஆண்டுகளுக்குப் பின் ‘ரெப்போ ரேட்’ உயர்வு… ஹோம் லோன், கார் லோன் EMI கூடுதலாக கட்டணுமா?

Published On:

| By Mathi

RBI-Repo Rate

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஹோம் லோன், கார் லோன் வாங்கியவர்கள் கூடுதல் EMI செலுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கிகளுக்கு பணம் தேவைப்படும்போது, அவை இந்திய ரிசர்வ் வங்கியிடம் குறுகிய காலத்துக்கு கடன் பெறுகின்றன. அந்தக் கடனுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம்தான் ‘ரெப்போ ரேட்’ என்று அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

‘ரெப்போ ரேட்’ உயர்த்தப்பட்டால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். இதையடுத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. இதனால் ஹோம் லோன், கார் லோன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி அதிகரிக்கலாம்.

அதேநேரத்தில் ‘ரெப்போ ரேட்’ குறைக்கப்பட்டால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறைந்த வட்டியில் பணம் பெற முடியும். அதன் பலனாக வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

விலைவாசி உயர்வு- ‘ரெப்போ ரேட்’ என்ன தொடர்பு?

நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளில் ‘ரெப்போ ரேட்’ மாற்றமும் ஒன்று.

சந்தையில் பணப்புழக்கம் அதிகரித்து, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும்போது அது விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கலாம். இத்தகைய சூழலில் ரெப்போ ரேட்டை உயர்த்தினால் வங்கிகள் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக வங்கிக் கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்கலாம்.

ADVERTISEMENT

இதனால் புதிதாக கடன் வாங்குவது ஓரளவு குறைந்து, சந்தையில் பணப்புழக்கம் கட்டுப்படும். அதன் மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது இதன் அடிப்படை.

தற்போது பணவீக்கம் அதிகரித்து வருவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ரெப்போ ரேட்டை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

கார் லோன், ஹோம் லோன் EMI என்ன ஆகும்?

ரெப்போ ரேட் உயர்ந்துள்ளதால், அடுத்த கேள்வி ஏற்கனவே ஹோம் லோன், கார் லோன் வாங்கியவர்கள் இனி கூடுதலாக EMI கட்ட வேண்டுமா என்பதுதான்.

ரெப்போ ரேட் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டாலும், உடனடியாக அனைத்து வங்கிகளிலும் ஹோம் லோன், கார் லோன் EMI உயர்ந்துவிடாது. வங்கிகள் தங்களது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறதா என்பதைப் பொறுத்தே இது அமையும்.

குறிப்பாக ரெப்போ ரேட்டுடன் இணைக்கப்பட்ட மாறும் வட்டி விகிதத்தில் (Floating Rate) கடன் வாங்கியவர்களுக்கு இதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தும்போது, வாடிக்கையாளரின் மாத EMI தொகையை அதிகரிக்கலாம். அல்லது EMI தொகையை அதே அளவில் வைத்துவிட்டு, கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கலாம்.

அதேநேரத்தில் நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Rate) கடன் வாங்கியவர்களுக்கு உடனடியாக இந்த உயர்வின் தாக்கம் ஏற்படாது.

எனவே ரெப்போ ரேட் உயர்ந்துவிட்டதால் அனைவரும் உடனடியாக கூடுதல் EMI கட்ட வேண்டும் என்று அர்த்தமில்லை. சம்பந்தப்பட்ட வங்கி கடனுக்கான வட்டியை மாற்றுகிறதா, கடன் எந்த வகையான வட்டி விகிதத்தில் உள்ளது என்பதைப் பொறுத்தே EMI-யில் மாற்றம் ஏற்படும்.

EMI எவ்வளவு அதிகரிக்கும்?

உதாரணமாக, ஒருவர் ரூ.30 லட்சம் ஹோம் லோனை 20 ஆண்டுகளுக்கு 8.50 சதவீத வட்டியில் வாங்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். தற்போது அவரது மாத EMI சுமார் ரூ.26,035 ஆக இருக்கும்.

வங்கி கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்தி 8.75 சதவீதமாக மாற்றினால், மாத EMI சுமார் ரூ.26,511 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்துக்கு சுமார் ரூ.476 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

இதேபோல் ரூ.50 லட்சம் ஹோம் லோனை 20 ஆண்டுகளுக்கு 8.50 சதவீத வட்டியில் வாங்கியிருந்தால், மாத EMI சுமார் ரூ.43,391 ஆக இருக்கும். வட்டி 8.75 சதவீதமாக உயர்ந்தால் EMI சுமார் ரூ.44,186 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்துக்கு சுமார் ரூ.795 கூடுதலாகும்.

இது உதாரணத்துக்கான கணக்கு மட்டுமே. கடன் தொகை, மீதமுள்ள கடன் காலம், தற்போதைய வட்டி விகிதம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி எவ்வளவு வட்டியை உயர்த்துகிறது என்பதைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் EMI உயர்வு மாறுபடும்.

4 ஆண்டுகளுக்குப் பின் உயர்வு

ரிசர்வ் வங்கி கடைசியாக 2023-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி ரெப்போ ரேட்டை 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தியது. அதன்பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ரெப்போ ரேட்டில் மாற்றம் செய்யப்படவில்லை.

2025-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி ரெப்போ ரேட்டை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்தது. தொடர்ந்து ஏப்ரல் 9-ம் தேதி மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் 6-ம் தேதி ரெப்போ ரேட்டை 0.50 சதவீதம் குறைத்த ரிசர்வ் வங்கி, 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதால் ரெப்போ ரேட் 5.25 சதவீதமானது.

இதன்படி 2025-ம் ஆண்டில் மட்டும் ரெப்போ ரேட் மொத்தம் 1.25 சதவீதம் குறைக்கப்பட்டது.

அதன்பிறகு 5.25 சதவீதமாக நீடித்து வந்த ரெப்போ ரேட்டை தற்போது 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.

2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ரெப்போ ரேட் உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகான ரெப்போ ரேட் விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share