விமான நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி… ECLGS 5.0 தொகையை விரைவாக விடுவிக்க கோரிக்கை!

Published On:

| By Minnambalam Desk

இந்திய விமானத் துறையில் நிதி நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், ECLGS 5.0 திட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக Federation of Indian Airlines (FIA), மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

கடன் தொகையின் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது

ECLGS 5.0 திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ள சில விமான நிறுவனங்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகையில் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளதாக FIA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மீதமுள்ள தொகையை விடுவிப்பதில் வங்கிகள் தயக்கம் காட்டுவதால் பல நிறுவனங்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. குறிப்பாக நிதி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்களுக்கு உடனடி பணப்புழக்கம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் செலவுகள்

ADVERTISEMENT

மேற்கு ஆசியாவில் ஏப்ரல் 2026 முதல் நீடித்து வரும் மோதல், வான்வெளி கட்டுப்பாடுகள், விமானப் பாதை மாற்றங்கள், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை விமான நிறுவனங்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனுடன் விமான எரிபொருளான ATF விலையும் உயர்ந்துள்ளதால், நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக FIA தெரிவித்துள்ளது.

ரூ.5,000 கோடி விமானத் துறைக்கு ஒதுக்கீடு

ECLGS 5.0 திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.2.55 லட்சம் கோடி வரை கூடுதல் கடன் வசதியை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விமானத் துறைக்காக மட்டும் ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களுக்கு 90 சதவீத கடன் உத்தரவாதத்தை NCGTC வழங்குகிறது.

வங்கிகளுக்கு வழிகாட்டுதல் வழங்க கோரிக்கை

மீதமுள்ள கடன் தொகையை, குறிப்பாக முதல் தவணையாக, விரைவாக வழங்குவதற்கு பங்கேற்கும் வங்கிகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் உறுதியையும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை வழங்க வேண்டும் என FIA கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிதி கிடைத்தால், விமான நிறுவனங்கள் அத்தியாவசிய செயல்பாட்டு செலவுகள் மற்றும் தினசரி பணப்புழக்கத் தேவைகளை சமாளித்து சேவைகளை தொடர்ந்து வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share