சிறு, நடுத்தர நிறுவனங்களில் மத்திய அரசு நேரடி முதலீட்டுக்கு ரூ.10,000 கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published On:

| By Mathi

Union Cabinet

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (அக்டோபர் 6) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மத்திய அரசு நேரடிப் பங்கு முதலீடு செய்வதற்கான சிறு, நடுத்தர நிறுவன வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2026-27 மத்திய பட்ஜெட்டில் இந்த நிதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிதி மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மத்திய அரசு நேரடியாகப் பங்கு முதலீடு செய்ய உள்ளது. குறிப்பாக உற்பத்தி, சேவை, தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த துறைகளில் வளர்ந்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு முதலீடு வழங்கப்படும்.

தற்போது ஸ்டார்ட்அப் மற்றும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்குப் பல்வேறு நிதித் திட்டங்கள் உள்ளன. ஆனால், ஏற்கனவே வளர்ச்சி அடைந்து அடுத்தகட்டத்துக்குச் செல்லும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான பங்கு முதலீடு கிடைப்பதில் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே ரூ.10,000 கோடி SME Growth Fund உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனங்களுக்குத் தேவையான முதலீடு கிடைப்பதுடன், அவை தொழிலை விரிவுபடுத்தவும் உலக அளவில் போட்டியிடும் நிறுவனங்களாக வளரவும் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது, வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு உள்நாட்டிலேயே முதலீடு கிடைக்கச் செய்வது, உலக அளவில் முன்னணி நிறுவனங்களாக உருவாகக்கூடிய இந்திய நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகியவையும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

ADVERTISEMENT

வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளில் இதுவும் முக்கியமான ஒன்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி பெருமிதம்

இந்த முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில், “மத்திய அமைச்சரவையின் முடிவு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தியாவின் அடுத்த தலைமுறை தொழிலதிபர்களை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கை இது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்தவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், உலக சந்தைகளில் நுழையவும் இந்தத் திட்டம் வாய்ப்பளிக்கும் என்றும் இந்திய நிறுவனங்கள் சர்வதேச உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியில் இணைவதற்கும் இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share